சிமி அமைப்பின் தடையை நீட்டிப்பது குறித்த விசாரணை - குன்னூரில் தொடங்கியது
சிமி அமைப்பின் தடையை நீட்டிப்பது குறித்த விசாரணை நேற்று குன்னூரில் தொடங்கியது.
குன்னூர்,
இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் என்பது சிமி அமைப்பு என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இந்த இயக்கம் கடந்த 1977-ம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலத்தில் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதால் மத்திய அரசு கடந்த 2001-ம் ஆண்டு தடை விதித்தது. இந்த தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.
கடந்த 2014-ம் ஆண்டு சிமி அமைப்பின் தடையை 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டது. இந்த தடை உத்தரவு இந்த ஆண்டு ஜனவரி மாதம் 31-ந் தேதியுடன் முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் சிமி அமைப்பின் தடையை நீட்டிப்பது குறித்த விசாரணையை புதுடெல்லி ஐகோர்ட்டு நீதிபதி முக்தா குப்தா தலைமையிலான தீர்ப்பாயம் பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தி வருகிறது.
இதன்படி நீலகிரி மாவட்டம் குன்னூரில் 3 நாள் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி சிமி அமைப்புக்கான தடையை நீட்டிப்பது குறித்த விசாரணை குன்னூர் நகராட்சி அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. இதற்காக குன்னூர் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கு கோர்ட்டு வளாகமாக மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து நீதிபதி முக்தா குப்தா தலைமையிலான 20 பேர் குழுவினர் விசாரணை நடத்தினர். இதில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீஸ் அதிகாரிகள், உளவுத்துறை அமைப்பினர் கலந்து கொண்டனர். விசாரணை தொடங்கிய முதல் நாளான நேற்று, இந்து அமைப்பின் சார்பாக வக்கீல் சந்திரசேகரன் மனு ஒன்றை கொடுத்தார்.
இந்த மனுவை பெற்றுக்கொண்ட நீதிபதி முக்தா குப்தா, நீங்கள் ஏன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய கூடாது? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த வக்கீல் தனக்கோ அல்லது கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இதே அரங்கில் நடைபெற்ற விசாரணையில் சாட்சியாக கொண்டு வரப்பட்ட கார்த்தி என்பவருக்கோ பாதுகாப்பு இல்லை. உயிருக்கும் உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது. எனவே பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய முடியவில்லை என்று கூறினார்.
பின்னர் தொடர்ந்து விசாரணை நடந்தது. முன்னதாக குன்னூர் நகராட்சி அலுவலகத்திற்கு வந்த நீதிபதி முக்தா குப்தாவுக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.
விசாரணை முடிந்த பின்னர் கூடுதல் அரசு வக்கீல் பின்கி ஆனந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
சிமி அமைப்பின் தடை குறித்து பல்வேறு மாநிலங்களில் விசாரணை நடைபெற்றது. அதன் அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (நேற்று) குன்னூரில் விசாரணை நடைபெற்றது. குன்னூரில் நடைபெற்ற தீர்ப்பாயம் விசாரணையில் கோவையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம், பீகார் மற்றும் குஜராத்தில் நடைபெற்ற சம்பவங்களில் பீகாரில் இருந்து ஒரு மனுவும் குஜராத் மாநிலத்தில் இருந்து 2 மனுக்களும் பெறப்பட்டது.
அந்த மனுக்களின் அடிப்படையில் விசாரணை அறிக்கையை மத்திய அரசுக்கு கொடுக்கப்படும். கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்து நாளை (இன்று) விசாரணை நடத்தி இறுதி அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்களிடம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விசாரணை நடத்தப்படுகிறது.
Related Tags :
Next Story