முதல்-அமைச்சரின் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்


முதல்-அமைச்சரின் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 23 Jun 2019 4:00 AM IST (Updated: 23 Jun 2019 2:43 AM IST)
t-max-icont-min-icon

முதல்- அமைச்சரின் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல், 

சமுதாய வளர்ச்சிக்கு சேவை ஆற்றும் இளைஞர் களின் பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, 2015-ம் ஆண்டு முதல் ‘முதல் -அமைச்சர் மாநில இளைஞர் விருது‘ வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தில் 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்படுகிறது.

விருது பெறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம், பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டு நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் மாநில இளைஞர் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கு தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண், பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ந்தேதி 15 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். கடந்த மார்ச் 31-ந்தேதி 35 வயது நிரம்பாதவராக இருக்க வேண்டும். கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக பணியாற்றியிருக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள், பொது துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரி, பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரர்களுக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் எடுத்து கொள்ளப்படும். இந்த விண்ணப்ப படிவம் தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணையதள பக்கத்தில் உள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்களை அடுத்த மாதம் (ஜூலை) 2-ந்தேதிக் குள் சமர்ப்பிக்க வேண்டும். மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நகலை சமர்ப்பிக்க வேண்டும். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் டி.ஜி. வினய் தெரிவித்துள்ளார்.

Next Story