மாணவர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கி ‘கல்வியில் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கியது அ.தி.மு.க. அரசு’ - அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு
மாணவர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கி கல்வியில் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கியது அ.தி.மு.க. அரசு என்று அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.
விழுப்புரம்,
விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடக்க விழா, கல்வி தொலைக்காட்சிக்கான செட்-டாப் பாக்ஸ் வழங்கும் விழா, பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா பள்ளி வளாகத்தில் நேற்று காலை நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி வரவேற்றார். சக்கரபாணி எம்.எல்.ஏ., ஆவின் தலைவர் பேட்டை முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு எல்.கே.ஜி. யு.கே.ஜி. வகுப்புகளை திறந்து வைத்து பள்ளிக்கு கல்வி தொலைக்காட்சிக்கான செட்-டாப் பாக்சினை வழங்கினார். தொடர்ந்து, பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். அப்போது அவர் பேசியதாவது:-
பெண் கல்வியை ஊக்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியவர் ஜெயலலிதா. அவர் வழியில் வந்த அ.தி.மு.க. அரசு இன்றைக்கு கல்வித்துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆரம்ப கல்வியை ஆங்கில வழியில் கற்க வேண்டும் என்ற எண்ணத்தில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டு வருகிறது.
தனியார் பள்ளிகளுக்கு நிகராக இன்றைக்கு அரசு பள்ளிகளில் அனைத்து வசதிகளையும் அ.தி.மு.க. அரசு செய்து வருகிறது. மாணவர்களுக்கு காலணி முதல் மடிக்கணினி வரை எண்ணற்ற திட்டங்களை வழங்கி கல்வியில் முதன்மை மாநிலமாக தமிழகத்தை உருவாக்கியது அ.தி.மு.க. அரசு.
மாநிலத்தின் நிதியில் 3-ல் ஒரு பகுதியை கல்வித்துறைக்காக அரசு ஒதுக்கியிருக்கிறது. எனவே விழுப்புரம் மாவட்ட மாணவ- மாணவிகள் நல்ல முறையில் படித்து கல்வியில் முதன்மை மாவட்டமாக கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆனந்தன், கிருஷ்ணப்பிரியா, விஜயலட்சுமி, ரவி, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சேவியர் சந்திரகுமார், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராமதாஸ், முன்னாள் ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர் ராமதாஸ், கூட்டுறவு அச்சக துணைத்தலைவர் குமரன், நகர ஜெயலலிதா பேரவை நிர்வாகி கோல்டுசேகர், நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் செந்தில், வளவனூர் நகர செயலாளர் சங்கரலிங்கம், முன்னாள் பேரூராட்சி தலைவர் முருகவேல், முன்னாள் நகரமன்ற கவுன்சிலர் அசோக்குமார், நகர இலக்கிய அணி செயலாளர் திருப்பதி பாலாஜி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதனை தொடர்ந்து விழுப்புரம் காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் நகராட்சிக்கு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பேட்டரியால் இயங்கும் 16 வாகனங்கள், 7 இலகுரக வாகனங்கள், 1 பொக்லைன் எந்திரம் என ரூ.96 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் 24 வாகனங்களை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார். இதில் நகராட்சி ஆணையர் லட்சுமி, சுகாதார ஆய்வாளர்கள் செல்வராஜ், ரமணன், உதவியாளர் மீனாட்சிசுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story