ஜோலார்பேட்டையில் இருந்து, ரெயிலில் சென்னைக்கு தண்ணீர் கொண்டு சென்றால் தி.மு.க. போராட்டம் நடத்தும் - வேலூரில், துரைமுருகன் பேட்டி


ஜோலார்பேட்டையில் இருந்து, ரெயிலில் சென்னைக்கு தண்ணீர் கொண்டு சென்றால் தி.மு.க. போராட்டம் நடத்தும் - வேலூரில், துரைமுருகன் பேட்டி
x
தினத்தந்தி 22 Jun 2019 10:30 PM GMT (Updated: 22 Jun 2019 9:15 PM GMT)

ஜோலார்பேட்டையில் இருந்து காவிரிக் கூட்டு குடிநீரை ரெயிலில் சென்னைக்கு கொண்டு சென்றால் மாவட்ட அளவில் தி.மு.க. மிகப்பெரிய போராட்டம் நடத்தும் என்று வேலூரில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூறினார்.

வேலூர்,

தமிழகத்தில் நிலவிவரும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க கோரியும், தமிழக அரசை கண்டித்தும் தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி, வேலூரில் அண்ணா கலையரங்கம் அருகே மாநகர தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், காத்தவராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், தி.மு.க. வினர் ஏராளமானோர் கலந்துகொண்டு குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரியும், அ.தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் குடிநீர் பிரச்சினை இல்லை என்று அமைச்சர் கூறுகிறார். ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க பல கோடி நிதி ஒதுக்கீடு செய்கிறார். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் இந்த ஆட்சியாளர்கள் குழம்பி போயிருக்கிறார்கள். குடிநீர் பிரச்சினையை தீர்க்கும்படி மக்கள் ஆளுகிறவர்களிடத்தில் முறையிடுகிறார்கள். ஆனால் அவர்களோ எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று கைவிரித்துவிட்டு ஆண்டவரிடத்தில் முறையிட்டு கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே குடிநீர் பிரச்சினையை எங்களால் தீர்க்க முடியவில்லை என்று ஆளுங்கட்சி ஒத்துக்கொண்டுள்ளது. ஒத்துக்கொண்ட பிறகு ஆட்சி நிர்வாகத்தை விட்டு வெளியேறுவது தான் மிகச்சிறந்தது. இல்லாவிட்டால் மக்கள் ஒட்டுமொத்தமாக வெளியேற்றி விடுவார்கள். நடைபெற இருக்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் குடிநீர் பிரச்சினையை முதன்மையாக தி.மு.க. வைக்கும்.

ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் சென்னைக்கு ஆழ்துளை குடிநீரை கொண்டு செல்வார்கள் என்று நினைக்கிறேன். காவிரிக் கூட்டு குடிநீரை கொண்டு சென்றால் மாவட்ட அளவில் மிகப்பெரிய போராட்டத்தை தி.மு.க. நடத்தும். இது சம்பந்தமாக வேலூர் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் முடிவு எடுப்பார்கள்.

தமிழக அரசு குடிநீர் பிரச்சினையை தீர்க்க மற்றும் வறட்சி நிவாரணம் உள்பட எந்த நிதியையும் மத்திய அரசிடம் கேட்டுப் பெறுவதில்லை. ஆனால் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சியில் இருக்கும்போது ஒவ்வொரு முறை வறட்சி வந்தபோதும் மத்திய அரசிடம் நிவாரணத்தை வாங்கி குடிநீர் பிரச்சினையை தீர்த்து உள்ளார். சட்டசபையில் குடிமராமத்து பணியின் கீழ் 300 ஏரிகளை தூர் வாருவோம் என்று கூறினார்கள். ஆனால் எந்த ஏரியையும் தூர் வாரவில்லை. வாராத ஏரியை தூர் வாரியதாக கணக்கு காட்டி கொள்ளையடித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story