தனியார் ஆஸ்பத்திரி மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம் வாங்கிய தொழிலாளர் நலத்துறை பெண் அதிகாரி கைது


தனியார் ஆஸ்பத்திரி மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம் வாங்கிய தொழிலாளர் நலத்துறை பெண் அதிகாரி கைது
x
தினத்தந்தி 23 Jun 2019 5:15 AM IST (Updated: 23 Jun 2019 2:53 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் தனியார் ஆஸ்பத்திரி மீது நடவடிக்ைக எடுக்காமல் இருக்க லஞ்சம் வாங்கிய தொழிலாளர் நலத்துறை பெண் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

மதுரை,

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம் அருகே உள்ள பாரதி உலா வீதியில் தொழிலாளர் துணை கமிஷனர் அலுவலகம் உள்ளது. இங்கு தொழிலாளர் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சரோஜா. இவர் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் ஆய்வுக்கு சென்றுள்ளார்.

அப்போது, அங்கு வேலை பார்த்து வரும் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி சட்டத்தின் கீழ் உரிய சம்பளம் வழங்கப்படாதது தெரியவந்துள்ளது. இந்த பிரச்சினையில் சம்பந்தப்பட்ட தனியார் ஆஸ்பத்திரி மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு சரோஜா ரூ.12 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து அந்த ஆஸ்பத்திரியின் மேலாளர் முருகவேல் மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஆஸ்பத்திரி மேலாளர் ஆரப்பாளையம் பகுதியில் வைத்து பெண் உதவி ஆய்வாளர் சரோஜாவிடம் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்து நின்ற லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு சத்தியசீலன் தலைமையிலான போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

மேலும், தொழிலாளர் துணை கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்துச்சென்று அவரிடம் விசாரணை நடத்தினர். அங்கு அவரது அறையில் நிறைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொழிலாளர் நலத்துறை அலுவலக வட்டாரத்தில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story