பா.ஜனதா, சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றால் முதல்-மந்திரி பதவி யாருக்கு? உத்தவ் தாக்கரே எச்சரிக்கையால் பரபரப்பு
பா.ஜனதா, சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றால் முதல்-மந்திரி பதவி யாருக்கு என்ற பிரச்சினையில் உத்தவ் தாக்கரேயின் திடீர் எச்சரிக்கையால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
மும்பை,
பா.ஜனதா, சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றால் முதல்-மந்திரி பதவி யாருக்கு என்ற பிரச்சினையில் உத்தவ் தாக்கரேயின் திடீர் எச்சரிக்கையால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
கூட்டணி
மராட்டியத்தில் கடந்த 2014-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கட்சிகளுக்கு இடையே யார் பெரியவன் என்ற போட்டியால் கூட்டணி அமையாமல் போனது.
ஆனால் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து, அந்த இரு கட்சிகளும் ஆட்சி செய்து வருகின்றன. இந்த நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் கூட்டணி அமைவது இழுபறியாக இருந்தது.
பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவும், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை அடுத்து கூட்டணி உடன்பாடு ஏற்பட்டது. இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் குறித்தும் அப்போதே முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
உத்தவ் தாக்கரே பதிலடி
சமீபத்தில் மந்திரி கிரிஷ் மகாஜன் தேர்தல் முடிந்த பிறகு அடுத்த முதல்-மந்திரி பா.ஜனதா கட்சியில் இருந்துதான் தேர்ந்தெடுக்கப்படுவார் என கூறினார்.
இதற்கு சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று திடீர் எச்சரிக்கை விடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோருடன் பேசிய பிறகு தேர்தல் கூட்டணி முடிவானது. அப்போது நான் பரஸ்பர புரிதலை அடைந்தேன். எனவே அடுத்த முதல்-மந்திரி யார்? என்ற விவகாரத்தில் மற்றவர்கள் கவலைப்பட வேண்டாம். சம்பந்தம் இல்லாதவர்கள் இந்த பிரச்சினையில் மூக்கை நுழைக்க வேண்டாம்.
பிரச்சினையில் உள்ள ஏழை விவசாயிகள் நாம் அதிகாரத்திற்கு வர வாக்களித்துள்ளனர். ஆனால் அவர்களின் துயரங்களை நிவர்த்தி செய்வதற்கு பதிலாக, யார் முதல்வராக வருவார் என்ற கேள்வி சிலருக்கு முக்கியமாக தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story