கோவையில் துணிகரம், கடன் வாங்கி தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி
கோவையில், கடன் வாங்கி தருவதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்யப்பட்டது. எனவே வங்கி கணக்கு பற்றி யாரிடமும் தெரிவிக்க கூடாது என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை,
கோவை உப்பார தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 39). தொழில் அதிபர். இவரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிலர் செல்போனில் தொடர்பு கொண்டு தாங்கள் பிரசித்தி பெற்ற நிதி நிறுவனங்களில் பணியாற்றுவதாகவும், பலருக்கு தனி நபர் கடன் வாங்கி கொடுத்து உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
மேலும் உங்களுக்கு வங்கியில் ரூ.10 லட்சம் கடன் வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளனர். இதற்கு சரவணன் சம்மதம் தெரிவித்துள்ளனர். உடனே அவர்கள், தொடக்க வைப்பு தொகை, ஜி.எஸ்.டி. கட்டணம், ஆவணங்கள் கட்டணம் ஆகியவற்றை செலுத்தினால் கடன் வாங்கி தருவதாக கூறியுள்ளனர்.
அதை நம்பிய சரவணன் தன் வங்கிகணக்கு ஆவணங்கள், ஏ.டி.எம். கார்டின் நகல் ஆகியவற்றை அந்த ஆசாமிகளுக்கு அனுப்பி உள்ளார். இதையடுத்து அந்த ஆசாமிகள், ஒவ்வொரு முறையும் சரவணனின் வங்கி கணக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பல்வேறு தவணைகளாக ரூ.5 லட்சத்து 16 ஆயிரத்து 500-ஐ ஆன்லைன் மூலம் எடுத்துள்ளனர்.
இதில், சரவணனின் செல்போன் எண்ணுக்கு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் ரகசிய எண்(ஓ.டி.பி.) வந்துள்ளது. அந்த எண்ணை அவர் அந்த ஆசாமிகளுக்கு கொடுத்து உள்ளார். அதை வைத்து அவர்கள் சரவணனின் பணத்தை மற்றொரு வங்கிக்கு ஆன்லைன் மூலம் மாற்றியுள்ளனர்.
ஒரு கட்டத்தில் சரவணன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழில் அதிபர் சரவணனின் வங்கி கணக்கிலிருந்து நூதன முறையில பணத்தை எடுத்து மோசடி செய்த ஆசாமிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
இந்த மோசடி குறித்து தகவல்தொழில்நுட்ப பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே சைபர்கிரைம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-
மோசடி ஆசாமிகள் சரவணனை நம்ப வைத்து திட்டமிட்டு ஏமாற்றி உள்ளனர். மோசடி ஆசாமிகள் பயன்படுத்திய செல்போன் எண்ணை கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம். சரவணனிடம் மூன்று பேர் பேசி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அவர்கள் யார்? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சரவணனின் வங்கி கணக்கிலிருந்து மற்றொரு வங்கி கணக்கிற்கு ஆன்லைன் மூலம் மோசடி ஆசாமிகள் ரூ.5 லட்சத்து 16 ஆயிரத்து 500-ஐ மாற்றியுள்ளனர். அந்த வங்கி எது? அந்த கணக்கு யாருடையது என்று விசாரித்து வருகிறோம். செல்போன் எண் மற்றும் வங்கி கணக்கை வைத்து மோசடி ஆசாமிகளை விரைவில் பிடித்து விடுவோம்.
வங்கியில் கடன் வாங்கி தருகிறோம் என்று செல்போனில் ஆசை வார்த்தை காட்டும் மோசடி ஆசாமிகளிடம் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும். கடன் வாங்கி தருவதாக யாரும் கூறினால் வங்கி கணக்கு எண், ஏ.டி.எம். கார்டு எண் ஆகியவற்றை யாரிடமும் பொதுமக்கள் தெரிவிக்க கூடாது.
வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு நேரில் சென்றால் தான் கடன் கிடைக்கும். ஆனால் வங்கி ஆவணங்கள் மற்றும் தனி நபர் விவரங்களை இமெயில், வாட்ஸ்- அப்பில் அனுப்புங்கள் என்று வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் கேட்காது. அப்படி கேட்பவர்கள் மோசடி ஆசாமிகளாக இருக்கலாம். எனவே வங்கி கணக்கு தொடர்பான ரகசிய தகவல்களை யாரிடமும் தெரிவிக்க கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story