மாவட்டத்தில் பொதுமக்கள் வீடுகளில் மழைநீரை சேமிக்க வேண்டும் - கலெக்டர் பிரபாகர் அறிவுரை


மாவட்டத்தில் பொதுமக்கள் வீடுகளில் மழைநீரை சேமிக்க வேண்டும் - கலெக்டர் பிரபாகர் அறிவுரை
x
தினத்தந்தி 22 Jun 2019 11:03 PM GMT (Updated: 22 Jun 2019 11:03 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் வீடுகளில் மழைநீரை சேமிக்க வேண்டும் என்று கலெக்டர் பிரபாகர் அறிவுரை கூறினார்.

கிரு‌‌ஷ்ணகிரி,

கிரு‌‌ஷ்ணகிரி ஒன்றியம் திப்பனபள்ளி ஊராட்சிக்குட்பட்ட கும்மனூர் கிராமத்தில், மழைகாலங்களில் மழைநீர் சேகரித்தல் மூலம் தண்ணீர் பிரச்சினைகளை சமாளிக்கும் வழிமுறைகள் குறித்த சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகேஸ்வரி, துணை இயக்குனர் (ஊராட்சிகள்) ஹரிஹரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரசன்னவெங்கடேசன், சரவணபவா, தாசில்தார் சேகர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவுப்படி நீர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சிறப்பு கிராம சபை கூட்டம் கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 333 கிராம ஊராட்சிகளிலும் நடைபெறுகிறது. திப்பனப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட திப்பனபள்ளி, தாசிரிப்பள்ளி, கும்மனூர், கோம்பள்ளி, மேட்டுப்பறை, சஜ்ஜலப்பள்ளி மற்றும் கோடியூர் ஆகிய 7 குக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள சிறு குட்டைகள், ஏரிகள், மற்றும் நீர் நிலைகள், தூர்வாரி மழை நீரை சேகரிப்பு மேற்கொள்ள வேண்டும். மரக்கன்றுகள் அதிக அளவில் நட வேண்டும். மழைநீர் சேகரிப்பு செய்திடும் வகையில் தனி நபர் இல்லங்கள் மற்றும் பொது இடங்களில் நீர் சேகரிப்பு தொட்டிகள் கட்ட வேண்டும்.

பள்ளிகள் மற்றும் கிராம புறங்களில் மக்களுக்கு மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். பொது இடங்களில் மழை நீர் சேகரிப்பு குறித்து சுவர்களில் விழிப்புணர்வு வரைபடம் வரைந்திருக்க வேண்டும். குறிப்பாக கிராமத்திற்குட்பட்ட கும்மனூர் சின்னஏரி 10 ஏக்கர் பரப்பளவிலும், கும்மனூர் பெரிய ஏரி 1.50 ஏக்கர் பரப்பளவில் உள்ள இரண்டு ஏரிகளை உடனடியாக ஆய்வு செய்து தூர்வார மதிப்பீடு செய்து பணிகளை தொடங்க வேண்டும்.

தாசிரிப்பள்ளி ஏரி 12 ஏக்கர் பரப்பளவிலும், சஜ்ஜலப்பளப்ளி ஏரி 22 ஏக்கர் பரப்பளவிலும், திப்பனபள்ளி ஏரி 25 ஏக்கர் பரப்பளவிலும், உள்ளது. இந்த ஏரிகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார் ஆகியோர் இணைந்து சரியான அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதனை தொடர்ந்து நீர்வரத்து கால்வாய்களை கண்டறிந்து தூர்வாரி மழை நீர் ஏரிகளுக்கு செல்லும் வகையில் நீர்வரத்து கால்வாய்கள் சீர் செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழக முதல்-அமைச்சர் குடிநீர் பைப்புகள் பழுது நீக்க ரூ.69 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். ஒகேனக்கல் குடிநீர் பைப்புகள் உடனடியாக சீரமைக்கப்பட்டு குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்களின் கோரிக்கை ஏற்று அரசு உயர்நிலைப்பள்ளிக்கு டிராக்டர் மூலம் தண்ணீர் வழங்கப்படும். தேவையான இடங்களில் சின்டெக்ஸ் டேங்க் வைத்து குடிநீர் வழங்கப்படும்.

அதேப்போல வீடுகளில் உள்ள தனிநபர் கழிப்பறைகளை பயன்படுத்த வேண்டும். திறந்தவெளி கழிப்பறை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வீடுகளை சுற்றி தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மழைநீரை சேமிக்க வேண்டும். ஆழ்துளை கிணறுகள் உள்ள இடங்களில் மழைநீர் சேமிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக பள்ளி மாணவ, மாணவிகளிடையே மழைநீர் சேகரிப்பு மற்றும் குடிநீர் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.


Next Story