திருமுல்லைவாயலில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்


திருமுல்லைவாயலில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 22 Jun 2019 11:57 PM (Updated: 22 Jun 2019 11:57 PM)
t-max-icont-min-icon

திருமுல்லைவாயலில், குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆவடி,

ஆவடி மாநகராட்சி 9-வது வார்டுக்கு உட்பட்ட திருமுல்லைவாயல் கலைஞர் நகர் 2 மற்றும் 3-வது தெரு பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்தநிலையில் கடந்த ஒரு மாதமாக வீட்டில் குடிநீர் குழாய்களிலும் தண்ணீர் வரவில்லை. லாரிகள் மூலமும் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. இதனால் குடிநீர் இன்றி தவித்த பொதுமக்கள், இதுபற்றி ஆவடி மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த திரளான பெண்கள் நேற்று மாலை குடிநீர் கேட்டு திடீரென திருமுல்லைவாயல் சி.டி.எச். சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த திருமுல்லைவாயல் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறினர்.

அதை ஏற்று சாலை மறியலை கைவிட்ட பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்டவரிசையில் அணிவகுத்து நின்றன. அதன்பிறகு போக்குவரத்து சீரானது.

Next Story