திருமணத்துக்கு மகன் மறுத்ததால் சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை


திருமணத்துக்கு மகன் மறுத்ததால்  சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 24 Jun 2019 4:00 AM IST (Updated: 23 Jun 2019 10:53 PM IST)
t-max-icont-min-icon

உறவினர்களுக்கு அழைப்பிதழ்கள் கொடுத்த பிறகு நிச்சயிக்கப்பட்ட திருமணத்துக்கு மகன் மறுத்ததால் விரக்தி அடைந்த ஓய்வுபெற்ற போக்குவரத்து போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஆவடி,

ஆவடி டி.ஆர்.ஆர். நகர் எக்ஸ்டென்சன் தனலட்சுமி நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் இருதயராஜ் (வயது 59). இவர், செம்பியம் போக்கு வரத்து போலீஸ் பிரிவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இருதயராஜின் மகன் பால்மேத்யூ (28) என்பவருக்கும், காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அடுத்த மாதம்(ஜூலை) 11-ந் தேதி திருமணம் நடைபெற இருந்தது.

இதற்காக திருமண அழைப்பிதழ் அச்சிட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இரு வீட்டாரும் கொடுத்து வருகின்றனர். திருமண ஏற்பாடுகளிலும் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் திடீரென இருதயராஜின் மகன் பால்மேத்யூ, தனக்கு இந்த திருமணம் வேண்டாம். அதில் விருப்பம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது.

அதைகேட்டு அதிர்ச்சி அடைந்த இருதயராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர், திருமண அழைப்பிதழ் அச்சிட்டு உறவினர்களுக்கு கொடுத்துவிட்ட நிலையில் திருமணத்தில் விருப்பம் இல்லை என்கிறாயே? என மகனுக்கு அறிவுரை வழங்கினர். ஆனாலும் அதை அவர் ஏற்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த இருதயராஜ் நேற்று காலை தனது வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த ஆவடி போலீசார், தற்கொலை செய்த இருதயராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story