செல்போன் எண்ணை ‘பிளாக்’ செய்து விட்டார் கரூர் கலெக்டர் மீது ஜோதிமணி எம்.பி. பரபரப்பு புகார்


செல்போன் எண்ணை ‘பிளாக்’ செய்து விட்டார் கரூர் கலெக்டர் மீது ஜோதிமணி எம்.பி. பரபரப்பு புகார்
x
தினத்தந்தி 24 Jun 2019 4:45 AM IST (Updated: 23 Jun 2019 10:54 PM IST)
t-max-icont-min-icon

எனது செல்போன் எண்ணை பிளாக் செய்து விட்டார் என்று கரூர் கலெக்டர் மீது ஜோதிமணி எம்.பி. பரபரப்பு புகார் கூறினார்.

க.பரமத்தி,

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட குப்பகவுண்டன் வலசு, காட்டம்பட்டி, கார்வழி, தொட்டம்பட்டி, தென்னிலை மெயின்ரோடு பகுதியில் நேற்று முன்தினம் கரூர் எம்.பி.ஜோதிமணி, அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. வி.செந்தில்பாலாஜி பொதுமக்களை நேரடியாக சந்தித்து குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் குறித்த கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடமிருந்து பெற்றனர்.

அப்போது, ஆழ்துளை கிணற்றுடன் கூடிய தொட்டிகளை சீரமைப்பது, காவிரிகூட்டுகுடிநீர் திட்டம் மூலம் தடையின்றி குடிநீர் வினியோகிக்க வேண்டும் மற்றும் சாலை வசதி, தெருவிளக்கு வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்றிதருமாறு பொதுமக்கள் வலியுறுத்தினர். மனுக்களை பெற்ற ஜோதிமணி மற்றும் செந்தில்பாலாஜி, இந்த கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் அளித்தனர்.

அப்போது கரூர் தொகுதி எம்.பி.ஜோதிமணி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கரூர் நாடாளுமன்ற தொகுதி முழுவதுமே குடிநீர் பிரச்சினை இருக்கிறது. நீண்ட நாட்களாக குடிநீர் சம்பந்தமான பணிகளை சரிவர மேற்கொள்ளாததே இதற்கான காரணம் ஆகும். இதனால் அரவக்குறிச்சி தொகுதி உள்பட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் ஊராட்சி வாரியாக மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுப்போம். கரூரில் குடிநீர்திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்திற்கு என்னை அழைக்கவில்லை. இது நாடாளுமன்ற உறுப்பினரின் அதிகாரத்தை தட்டி கழிக்கும் போக்காக தான் தெரிகிறது.

மேலும் தொகுதிகளிலுள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. தேர்தல் நேரத்தில் ஏற்பட்ட பிரச்சினையையொட்டி எனது செல்போன் நம்பரை, கலெக்டர் “கால் பிளாக்” செய்தார். நான் நாடாளுமன்ற உறுப்பினரானதும் அதனை எடுத்து விட்டிருப்பார் என நினைத்தேன். ஆனால் தொடர்ந்து கால் பிளாக்கில் வைத்துள்ளார். இப்படி இருந்தால் பொதுமக்கள் கூறும் கோரிக்கைகளை எப்படி முன் வைப்பது?. எனவே இனியாவது இதனை மாற்றி கொள்ள வேண்டும்.

தமிழகத்திலுள்ள தீவிரமான குடிநீர் பிரச்சினையை, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை சேர்ந்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டி அதற்கான தனி நிதியை மத்திய அரசானது மாநில அரசுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும், காவிரி பிரச்சினையிலும் உரிய தீர்வு காண வேண்டும் என்கிற கோரிக்கைகளை எடுத்துரைத்தோம். தண்ணீர் பிரச்சினை என்பது பொதுப்பிரச்சினை. இது அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரசை சேர்ந்த அரசியல் பிரச்சினை அல்ல. எந்த கட்சியாக இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், மாவட்ட நிர்வாகம் ஒன்றிணைந்து பணியாற்ற கடமை பட்டவர்கள் தான் என்பதை உணர்ந்து ஆய்வு கூட்டம் உள்ளிட்டவற்றை நடத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து கலெக்டரிடம் கேட்ட போது, எம்.பி. ஜோதிமணியின் செல்போன் எண்ணை பிளாக் செய்யவில்லை என்றார்.

Next Story