தென்காசியில் இரும்பு கடைக்காரர் வீட்டில் ரூ.20 லட்சம் நகை-பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


தென்காசியில் இரும்பு கடைக்காரர் வீட்டில் ரூ.20 லட்சம் நகை-பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 24 Jun 2019 3:30 AM IST (Updated: 23 Jun 2019 11:53 PM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் இரும்பு கடைக்காரர் வீட்டில் ரூ.20 லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தென்காசி, 

தென்காசியில் இரும்பு கடைக்காரர் வீட்டில் ரூ.20 லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இரும்பு கடைக்காரர்

நெல்லை மாவட்டம் தென்காசி சக்திநகர் பகுதியை சேர்ந்தவர் முகம்மது அலி ஜின்னா. இவர் தென்காசி கூலக்கடை தெருவில் இரும்புக்கடை நடத்தி வருகிறார். இவர் தென்காசி முன்னாள் வர்த்தக சங்க தலைவர் ஆவார்.

சம்பவத்தன்று காலை இவருடைய மனைவி வெளியூர் சென்று விட்டார். எனவே முகம்மது அலி ஜின்னா வீட்டின் கதவை பூட்டிவிட்டு கடைக்கு சென்று விட்டார். பின்னர் மாலை 6 மணிக்கு அந்த வீட்டில் வேலை பார்க்கும் பெண் வீட்டிற்கு வந்தார். வீட்டை சுத்தம் செய்துவிட்டு 7.30 மணிக்கு வெளியே சென்றுவிட்டார். பின்னர் இரவு வியாபாரம் முடிந்ததும் முகம்மது அலி ஜின்னா வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த 48 பவுன் தங்க நகைகள், ரூ.11 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுவிட்டது தெரியவந்தது. கொள்ளை போன நகை-பணத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.

மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து தென்காசி போலீசில் முகம்மது அலி ஜின்னா புகார் செய்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story