‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம் வருவாய் நிர்வாக ஆணையர் தகவல்


‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம் வருவாய் நிர்வாக ஆணையர் தகவல்
x
தினத்தந்தி 24 Jun 2019 4:30 AM IST (Updated: 24 Jun 2019 12:40 AM IST)
t-max-icont-min-icon

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் வல்லதிராக்கோட்டையில் உள்ள தோட்டக்கலை பண்ணையில் நடைபெற்று வரும் பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, கடந்த ஆண்டு நவீனமுறையில் குறைந்த நீரை பயன்படுத்தி அதிக பலனை அளிக்கும் வகையில் வேர் மண்டல நீர் பாசன முறையில் நட்டு பராமரிக்கப்பட்டு வரும் மரக்கன்றுகளை ஆய்வு செய்தனர்.

பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறுகையில், சாதாரணமான முறையில் நட்டு பராமரிக்கப்பட்டு வரும் மரக்கன்றுகளை விட மேற்கண்ட நவீன முறையை பயன்படுத்தி நட்டு பராமரிக்கப்பட்டு வரும் மரக்கன்றுகளின் வளர்ச்சி மற்றும் மகசூல் ஆச்சரியப்படும் வகையில் 2 மடங்கு அதிகமாக உள்ளது. இதற்கு குறைந்த அளவு நீரே போதுமானது என்றார்.

தொடர்ந்து வருவாய் நிர்வாக ஆணையர் சத்திய கோபால் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

கஜா புயலால் பாதித்த மாவட்டங்களில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிவாரண தொகை தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது தேர்தல் முடிந்ததால் நடத்தை விதிமுறை தளர்த்தப்பட்டு விட்டதால் விரைவில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசு உத்தரவிட்டு உள்ளது. இதற்காக ரூ.98 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் குடிநீர் தேவைகளுக்காக ரூ.710 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று உள்ளது.

தற்போது கூடுதலாக ரூ.200 கோடி தமிழக முதல்-அமைச்சர் நிதி ஒதுக்கி உள்ளார். மழைநீர் சேகரிப்பு திட்டத்தை முறையாக செயல்படுத்த அனைத்து மாவட்ட கலெக்டருக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 24 மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை உள்ளது. சென்னை மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் தான் அதிக அளவு குடிநீர் பிரச்சினை நிலவுகிறது. குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு தமிழக அரசு அனைத்துவித நடவடிக்கையும் எடுத்து வருகிறது.

குறிப்பாக, கல்குவாரி பகுதிகளில் உள்ள தண்ணீரை பரிசோதனை செய்து தரம் நன்றாக இருந்தால் குடிநீருக்கு பயன்படுத்துவதற்காக திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதேபோல மற்ற மாவட்டங்களில் கல்குவாரிகளில் உள்ள தண்ணீரையும் பரிசோதனை செய்து பயன்படுத்த அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் 4 ஆயிரத்து 399 பகுதிகள் ‘இயற்கை பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் பகுதிகள்’ என அரசால் கணக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதற்காக ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பில் திட்டம் தயாரிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது கலெக்டர் உமாமகேஸ்வரி, கூடுதல் திட்ட இயக்குனர் ராஜகோபால் சுங்கரா, வேளாண்மை இணை இயக்குனர் சுப்பையா, தோட்டக்கலை துறை துணை இயக்குனர் அருணாச்சலம் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து உடன் இருந்தனர்.

முன்னதாக விவசாயிகளுக்கான இ-அடங்கல் பயிற்சி புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் கலந்து கொண்டு பேசினார். 

Next Story