குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து அரவக்குறிச்சியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து அரவக்குறிச்சியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Jun 2019 11:00 PM GMT (Updated: 23 Jun 2019 7:16 PM GMT)

குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து அரவக்குறிச்சியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரவக்குறிச்சி,

அரவக்குறிச்சி தொகுதியில் அனைத்து பகுதிகளிலும் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்தும், குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தியும் அரவக்குறிச்சி பஸ்நிலையம் அருகில் நேற்று கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. வி.செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார். மாநில நெசவாளர் அணித்தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் மணியன் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, ம.சின்னச்சாமி, ஒட்டன்சத்திரம் எம்.எல்.ஏ. சக்கரபாணி ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

ரூ.10 ஆயிரம் கோடி நிதி

ஆர்ப்பாட்டத்தில் வி.செந்தில்பாலாஜி பேசியதாவது, தற்போது கரூர் மாவட்டத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஏற்கனவே 3 ஆண்டுகளுக்கு முன்பு அரவக்குறிச்சி, க.பரமத்தி ஒன்றியத்திற்கு ஒன்றாக இருக்கும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை தனித்தனியாக பிரித்து அரவக்குறிச்சி, க.பரமத்திக்கு இரண்டு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் வழங்கியிருந்தால் இன்று இவ்வளவு குடிநீர் பற்றாக்குறை வந்திருக்காது. ஆளுகின்ற அரசு குடிநீர் பிரச்சினைக்கு கவனம் செலுத்தவில்லை. 8 வழிச்சாலை அமைப்பதற்கு ரூ.10 ஆயிரம் கோடி நிதியை வழங்குகின்ற ஆளும் அரசு தமிழகம் முழுவதும் 234 தொகுதிக்கும் ரூ. 200 கோடியை மட்டுமே வழங்கியுள்ளது. இந்த அரசு தமிழக மக்கள் மீது அக்கறை இல்லாத அரசாக உள்ளது. விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முதல்-அமைச்சராக ஆட்சிப்பொறுப்பை ஏற்கும் காலம் விரைவில் வரும். ஆட்சிப்பொறுப்பை ஏற்றவுடன் 15 நாட்களில் தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை போக்கிடுவார்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிர்வாகிகள்

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் பூவை.ரமேஷ்பாபு, பள்ளப்பட்டி நகர செயலாளர் தோட்டம் பஷீர்அகமது, முன்னாள் பேரூராட்சி தலைவர் முனவர்ஜான், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்தி, தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் அரவக்குறிச்சி நகர செயலாளர் ம.அண்ணாத்துரை நன்றி கூறினார்.

Next Story