தஞ்சை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லை வைத்திலிங்கம் எம்.பி. பேச்சு


தஞ்சை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லை வைத்திலிங்கம் எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 24 Jun 2019 4:30 AM IST (Updated: 24 Jun 2019 1:16 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லை என்று வைத்திலிங்கம் எம்.பி. கூறினார்.

பட்டுக்கோட்டை,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சி குடிநீர் வழங்கல் துறை சார்பில் 18-வது வார்டு குரும்பகுளம் பள்ளி அருகில் ரூ.15 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சமூக நல சுத்திகரிக்கப்பட்ட தானியங்கி குடிநீர் வழங்கும் எந்திரம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். அமைச்சர் துரைக்கண்ணு முன்னிலை வகித்தார். வைத்திலிங்கம் எம்.பி. கலந்து கொண்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரத்தை இயக்கி வைத்தார். அப்போது அவர் பேசும் போது கூறியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையின்படி பட்டுக்கோட்டை நகரில் ரூ.15 லட்சம் செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பட்டுக்கோட்டை நகரில் உள்ள 33-வார்டுகளை சேர்ந்த மக்களும் பயன்பெறும் வகையில் 23 இடங்களில் ரூ.3 கோடியே 45 லட்சம் செலவில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்க்கும், 1 லிட்டர் 1 ரூபாய்க்கும் வழங்கப்படும்.

தஞ்சை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு எந்த இடத்திலும் இல்லை. சென்னை மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் முதல் அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது வீராணம் திட்டத்தை கொண்டு வந்தார். அது செயல்படாமல் போய் விட்டது. அதன் பிறகு புதிய வீராணம் திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்து சென்னை மக்களுக்கு குடிநீர் கிடைக்க செய்தார்.

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் பட்டுக்கோட்டை பல்வேறு வளர்ச்சிகளை பெற்றுள்ளது. சேகர் எம்.எல்.ஏ. பட்டுக்கோட்டையில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story