தக்கலை அருகே புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் விபரீதம்


தக்கலை அருகே புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் விபரீதம்
x
தினத்தந்தி 24 Jun 2019 4:30 AM IST (Updated: 24 Jun 2019 1:39 AM IST)
t-max-icont-min-icon

தக்கலை அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பத்மநாபபுரம்,

தக்கலை அருகே அழகியமண்டபம் பனங்காலவிளை பகுதியை சேர்ந்தவர் அஜித் (வயது 28). இவர், பொக்லைன் எந்திர டிரைவராக பணியாற்றி வந்தார்.

இவருடைய உறவினர் அதே பகுதியை சேர்ந்த சசிகுமார், டிரைவர். இவர் சென்னையில் டிரைவராக இருந்தபோது, அங்கு நர்சிங் படித்து வந்த கருங்கல்லை சேர்ந்த சுபிதா(25) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சசிகுமார் சாலை விபத்தில் இறந்து விட்டார்.

அதைத்தொடர்ந்து உறவினர் என்பதால் சுபிதாவுக்கு, அஜித் உதவிகள் செய்து வந்தார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. கடந்த சில மாதங்களுக்கு முன் அஜித்தும், சுபிதாவும் திருமணம் செய்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து சுபிதா தனது மகள், அஜித்துடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். அப்போது, அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அஜித், சுபிதாவையும், மகளையும் வீட்டிற்கு வெளியே செல்லுமாறு கூறினார். அதனால், சுபிதா மகளுடன் வெளியே சென்று வாசலில் அமர்ந்தார். பின்னர் வீட்டிற்குள் இருந்து சத்தம் எதுவும் இல்லாததால் சந்தேகமடைந்த சுபிதா உள்ளே சென்று பார்த்தார். அப்போது, அஜித் துப்பட்டாவில் தூக்கில் தொங்கிய நிலையில் அசைவற்று காணப்பட்டார். இதனை பார்த்த சுபிதா அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் துப்பட்டாவை கத்தியால் அறுத்து கணவரை மீட்டார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அஜித்தை தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அஜித் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த தக்கலை போலீசார் அஜித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் புதுமாப்பிள்ளை தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story