ரூ.168 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய துணை மின் நிலைய சோதனை ஓட்டம் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்


ரூ.168 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய துணை மின் நிலைய சோதனை ஓட்டம் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
x
தினத்தந்தி 24 Jun 2019 4:30 AM IST (Updated: 24 Jun 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

உத்தனப்பள்ளியில் ரூ.168.07 கோடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தின் சோதனை ஓட்டத்தை அமைச்சர்கள் தங்கமணி, அன்பழகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

ராயக்கோட்டை,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளி கிராமத்தில் ரூ.168.07 கோடி மதிப்பில் புதிதாக துணை மின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். சென்னை மின் பகிர்மான இயக்குனர் ஹெலன் மற்றும் செந்தில்வேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயர்த்தீர்வை துறை அமைச்சர் பி.தங்கமணி, உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு துணை மின் நிலையத்தின் சோதனை ஓட்டத்தை தொடங்கி வைத்தனர்.பின்னர் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-

உத்தனப்பள்ளியில் ஆயிரமாவது துணை மின் நிலையத்தின் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டம் முடிந்த பின்பு 2 வாரத்திற்குள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார். இந்த புதிய துணை மின்நிலையத்தில் 100 எம்.பி.ஏ. மின் சக்தி கொண்ட 2 தானியங்கி மின் மாற்றியும், அதன் தொடர்புடைய சாதனங்களும், நிறுவப்பட்டுள்ளது. இந்த மின் நிலையத்தின் மொத்த மதிப்பீட்டு தொகை ரூ.168.07 கோடியாகும். இதன் மூலம் உத்தனப்பள்ளி, ராயக்கோட்டை, காமன்தொட்டி, தேன்கனிக்கோட்டை, ஓசூர், கெலமங்கலம், நாகமங்கலம், சூளகிரி, பேரண்டப்பள்ளி மற்றும் பாகலூர் ஆகிய பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர்களுக்கு தற்போது வழங்கப்படும் சீரான மற்றும் தடங்களில்லா மின் வினியோகம் உறுதி செய்யப்படுகிறது.

தற்போது ராயக்கோட்டை, காமன்தொட்டி, தேன்கனிக்கோட்டை, சூளகிரி ஆகிய 110 கிவோ துணை மின் நிலையங்கள், ஓசூர் மற்றும் குருபரபள்ளி 230 கிவோ துணை மின்நிலையங்களில் இருந்து மின்னூட்டம் பெறுகின்றன. இந்த துணை மின்நிலையங்களுக்கான மின்னூட்டம் இனி உத்தனப்பள்ளி துணை மின்நிலையத்திற்கு மாற்றப்படும். இதனால் குருபரப்பள்ளி மற்றும் ஓசூர் துணை மின்நிலையங்களில் கூடுதல் மின் இணைப்பு வழங்கப்படும். இந்த துணை மின்நிலையங்கள் மூலம் கூடுதலான புதிய மின் நுகர்வோர்கள் பயனடைந்து மாவட்டத்தில் தொழில் வளர்ச்சிக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இன்றைய கால கட்டத்தில் தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணம் இரவு பகல் பாராமல் மின்சாரத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் பங்களிப்புதான் முக்கியத்துவம் வாய்ந்துள்ளது. தமிழகத்தில் இனி எப்போதும் மின் வெட்டு இருக்காது.

இவ்வாறு அமைச்சர் பேசினார்.இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பாலகிரு‌‌ஷ்ணாரெட்டி, முன்னாள் எம்.பி. அசோக்குமார், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் கிரு‌‌ஷ்ணன், அ.தி.மு.க. நிர்வாகிகள் ஹரீஸ்ரெட்டி, திம்மராயப்பா உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Next Story