லிங்கனமக்கி அணையில் இருந்து பெங்களூருவுக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம் சரியல்ல எடியூரப்பா பேட்டி


லிங்கனமக்கி அணையில் இருந்து பெங்களூருவுக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம் சரியல்ல எடியூரப்பா பேட்டி
x
தினத்தந்தி 24 Jun 2019 4:00 AM IST (Updated: 24 Jun 2019 2:38 AM IST)
t-max-icont-min-icon

லிங்கனமக்கி அணையில் இருந்து பெங்களூருவுக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம் சரியல்ல என்று எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு, 

லிங்கனமக்கி அணையில் இருந்து பெங்களூருவுக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம் சரியல்ல என்று எடியூரப்பா கூறினார்.

விசாரணை நடத்தவில்லை

கர்நாடக பா.ஜனதா சார்பில் டாக்டர் சாம்பிரசாத் முகர்ஜி தியாக தின நிகழ்ச்சி பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். அதன் பிறகு அவர் நிருபர் களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அம்பேத்கர், சர்தார் வல்லபாய் படேல் ஆகியோருக்கு ஏற்பட்டது போலவே காங்கிரசில் சாம்பிரசாத் முகர்ஜிக்கு அவமானம் இழைக்கப்பட்டது. சாம்பிரசாத் முகர்ஜியின் சந்தேக மரணம் குறித்தும் காங்கிரஸ் எந்த விசாரணையும் நடத்தவில்லை. காங்கிரசுக்கு மாற்றாக புதிய கட்சியை சாம்பிரசாத் முகர்ஜி தொடங்கினார். அவரது வாழ்க்கை வரலாறு அனைவருக்கும் முன்மாதிரி ஆகும்.

அதிகாரிகளை பாராட்டினேன்

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்ய மத்திய அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது. அங்கு மாற்றத்திற்கான காற்று வீசும் வகையில் பிரதமர் மோடியும், அமித்ஷாவும் பணியாற்றி வருகிறார்கள். முதல்-மந்திரி குமாரசாமி வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை ஆய்வு செய்வதை விட்டுவிட்டு, எதிர்க்கட்சி தலைவர் என்ன செய்கிறார் என்பதை கவனித்துக் கொண்டிருக்கிறார்.

நான் வறட்சி பகுதிகளை ஆய்வு செய்தபோது, சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளை பாராட்டினேன். சரியாக செயல்படாத அதிகாரிகளை கண்டித்தேன். துமகூருவில் ஒரு கிராமத்தில் பா.ஜனதா கொடியை அகற்ற துணை முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார் என்ற செய்தியை படித்தேன். இதுபற்றி முழு விவரங்களை பெற்று, அதன் பிறகு பேசுகிறேன். ஒரு தேசிய கட்சியின் கொடி பறக்கக்கூடாது என்று சொல்வது தவறு.

பெங்களூருவுக்கு தண்ணீர்

லிங்கனமக்கி அணையில் இருந்து பெங்களூருவுக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதை கண்டித்து சிவமொக்காவில் போராட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது சரியான நடவடிக்கை அல்ல. இதை தவிர்த்துவிட்டு, வேறு ஆதாரங்கள் மூலம் பெங்களூருவுக்கு தண்ணீர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story