ராமநகர் அருகே மரத்தில் கார் மோதி மூதாட்டி உள்பட 3 பேர் உடல்நசுங்கி சாவு திருமண வரவேற்பில் கலந்துகொண்டு வீடு திரும்பியபோது சோகம்


ராமநகர் அருகே மரத்தில் கார் மோதி மூதாட்டி உள்பட 3 பேர் உடல்நசுங்கி சாவு திருமண வரவேற்பில் கலந்துகொண்டு வீடு திரும்பியபோது சோகம்
x
தினத்தந்தி 24 Jun 2019 4:30 AM IST (Updated: 24 Jun 2019 2:42 AM IST)
t-max-icont-min-icon

ராமநகர் அருகே, திருமண வரவேற்பில் கலந்து கொண்டு வீடு திரும்பியபோது மரத்தில் கார் மோதியதில் மூதாட்டி உள்பட 3 பேர் உடல் நசுங்கி இறந்தனர்.

ராமநகர், 

ராமநகர் அருகே, திருமண வரவேற்பில் கலந்து கொண்டு வீடு திரும்பியபோது மரத்தில் கார் மோதியதில் மூதாட்டி உள்பட 3 பேர் உடல் நசுங்கி இறந்தனர்.

மரத்தில் கார் மோதியது

ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா ஹுச்சஹனுமேகவுடனபாளையா அருகே மாகடி-குனிகல் சாலையில் நேற்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்ற மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கி உருக்குலைந்தது.

காரில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்கள். இது குறித்து அறிந்தவுடன் மாகடி போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மூதாட்டி உள்பட 3 பேர் பலி

அப்போது, காரில் இருந்த 2 பேர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியதும், 3 பேர் உடல் நசுங்கி இறந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து படுகாயம் அடைந்தவர்களை மீட்ட போலீசார் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில் இறந்தவர்கள் ராமநகர் மாவட்டம் ஸ்ரீபதிஹள்ளியை சேர்ந்த நரசம்மா (வயது 65), தாலிகெரேயை சேர்ந்த ஜெயலட்சுமம்மா (42), காமசந்திராவை சேர்ந்த குமார் (25) என்பது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் ராமநகர் மாவட்டம் மாகடி அருகே உள்ள கரேனஹள்ளியில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு காரில் வீடு திரும்பியபோது விபத்தில் சிக்கியது தெரியவந்தது. இதுகுறித்து மாகடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story