குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் திருப்பூர் ரெயில் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு


குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் திருப்பூர் ரெயில் நிலையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 24 Jun 2019 4:30 AM IST (Updated: 24 Jun 2019 2:48 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் ரெயில் நிலையத்தில் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

திருப்பூர்,

திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை ரெயில் நிலையங்கள் தெற்கு ரெயில்வே சேலம் கோட்ட நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக வெளியூர்களுக்கு ஏராளமான ரெயில்கள் சென்று வருகிறது. இந்த ரெயில்கள் ஈரோடு-சேலம் இடையே மாவேலிபாளையம், சங்ககிரி உள்ளிட்ட காட்டுப்பகுதியில் சில நேரங்களில் ரெயில்வே சிக்னலுக்காக நிற்கவேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்போது முன்பதிவு பெட்டிகளில் மர்ம நபர்கள் சிலர் ஏறி, பெண் பயணிகளிடம் நகைப்பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெரும்பாலும் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதால் ரெயில் பயணிகள் மிகுந்த அச்சத்தில் இருந்து வருகின்றனர். இதன் மீதுபோலீசார் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் ரெயில் நிலையங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் குற்ற செயல்கள் அதிகரித்து வந்தது.

இதைத்தொடந்து திருப்பூர் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பை அதிகரிக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட ரெயில் நிலைய போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தாலும், தற்போது ரெயில்வே பாதுகாப்பு சிறப்பு படை பிரிவு போலீசார் கடந்த சில நாட்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிலையத்தின் 2-வது நுழைவு வாயிலிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். பயணிகளின் உடைமைகளையும் சோதனையிட்டு வருகின்றனர். குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் ரோந்துபணியில் சிறப்பு படையினர் தினந் தோறும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும், அப்போது ரெயில் நிலையத்தில் சந்தேகப்படும் படியாக யாராவது சுற்றித்திரிந்தாலோ, குற்ற செயல்களில் ஈடுபடுவது தெரிந்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story