துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் முன்னிலையில் அதிகாரிகள் மீது கிராம மக்கள் சரமாரி குற்றச்சாட்டு
துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் முன்னிலையில் அதிகாரிகள் மீது கிராம மக்கள் சரமாரியாக குற்றச்சாட்டுகளை கூறினார்கள். இதனால் மக்கள் தொடர்பு நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரு,
துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் முன்னிலையில் அதிகாரிகள் மீது கிராம மக்கள் சரமாரியாக குற்றச்சாட்டுகளை கூறினார்கள். இதனால் மக்கள் தொடர்பு நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
கிராம தரிசனம்
முதல்-மந்திரி குமாரசாமி கிராம தரிசன திட்டத்தை கடந்த 21-ந் தேதி யாதகிரி மாவட்டத்தில் தொடங்கினார். குருமித்கல் தாலுகாவில் உள்ள சன்டரகி கிராமத்தில் அவர் தங்கி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். மறுநாள் கலபுரகி மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் தங்க குமாரசாமி முடிவு செய்திருந்தார். ஆனால் மழை பெய்ததால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. மந்திரிகளும் இதே போல் கிராமங்களில் தங்கி மக்களின் குறைகளை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-மந்திரி கேட்டுக் கொண்டார்.
அதன்படி துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் நேற்று முன்தினம் துமகூரு மாவட்டம் கொரட்டகெரே தாலுகாவில் சுற்றுப்பயணம் செய்தார். கிராமங்களுக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை தீர்க்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் பரமேஸ்வர் நேற்று 2-வது நாளாக கொரட்டகெரே தாலுகாவில் மக்கள் தொடர்பு நிகழ்ச்சியை நடத்தினார். மாவட்ட கலெக்டர் உள்பட அதிகாரிகளுடன் கிராமங்களுக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
கிராமத்திற்கு வருவதே இல்லை
அவர் சின்னஹள்ளி கிராமத்தில் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அந்த கிராம மக்கள், அரசு அதிகாரிகள் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை கூறினார்கள். அதாவது அதிகாரிகள் தங்கள் கிராமத்திற்கு வருவதே இல்லை என்றும், இங்குள்ள பிரச்சினைகளை தீர்ப்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்துவது இல்லை என்றும் தெரிவித்தனர். யலசினகெரே குக்கிராமத்தை வருவாய் கிராமமாக மாற்றுமாறு அதிகாரிகளிடம் மனு கொடுத்ததாகவும், அதன் மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் கூறினர்.
அதிகாரிகள் மீது மக்கள் புகார் கூறியதால் நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. புகார் கூறிய மக்களை பரமேஸ்வர் சமாதானப்படுத்தினார். சரியாக செயல்படாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். இதையடுத்து மக்கள் அமைதி நிலைக்கு திரும்பினர்.
பா.ஜனதா கொடி
இதற்கிடையே தோவினகெரே கிராமத்தில் மலிவு விலை மருந்து கடை அருகே இருந்த பா.ஜனதா கொடியை அகற்றும்படி பரமேஸ்வர் உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாயின. அந்த கொடியை நிறுவிய பா.ஜனதா தொண்டருக்கு நோட்டீசு அனுப்பும்படியும் அவர் அறிவுறுத்தியதாக கூறப்பட்டது. இதற்கு பா.ஜனதா எதிர்ப்பு தெரிவித்தது.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள பரமேஸ்வர், “தோவினகெரே கிராமத்தில் உள்ள பா.ஜனதா கொடியை அகற்றும்படி அதிகாரிகளுக்கு நான் உத்தரவு பிறப்பிக்கவில்லை. இந்த விஷயத்தில் எனது பெயர் பயன்படுத்தப்பட்டது தவறானது“ என்றார்.
Related Tags :
Next Story