ஐஸ் கம்பெனியில் ரூ.2½ லட்சம் கொள்ளை


ஐஸ் கம்பெனியில் ரூ.2½ லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 24 Jun 2019 3:45 AM IST (Updated: 24 Jun 2019 3:41 AM IST)
t-max-icont-min-icon

சோழவந்தான் அருகே ஐஸ் கம்பெனியில் பணப்பெட்டியில் வைத்திருந்த ரூ.2½ லட்சத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.

சோழவந்தான்,

சோழவந்தான் அருகே மதுரை-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் உள்ள நகரி கிராமத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. அங்குள்ள ஐஸ் கம்பெனி ஒன்றில் அன்றாட விற்பனையாகும் பணத்தை பணப்பெட்டியில் வைத்து, மறுநாள் வங்கியில் செலுத்துவதை ஊழியர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இதேபோல் நேற்று முன்தினம் விற்பனையான ரூ.2½ லட்சத்தை கம்பெனியினுள் பணப்பெட்டியில் வைத்துவிட்டு ஊழியர்கள் வேலையை முடித்துவிட்டு சென்று விட்டனர்.

இந்தநிலையில் மர்ம ஆசாமிகள் நள்ளிரவில் அந்த ஐஸ் கம்பெனியின் உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அவர்கள் பணப்பெட்டியை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.2½ லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.

மறுநாள் காலை கம்பெனிக்கு வந்த ஊழியர்கள், பணப்பெட்டி உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து அவர்கள் கம்பெனி மேலாளருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வந்து, கம்பெனியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை பார்த்தபோது, நள்ளிரவு நேரத்தில் ஐஸ் கம்பெனியில் நுழைந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் முகமூடி அணிந்து வந்து பணப்பெட்டியை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சோழவந்தான் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார், சோழவந்தான் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் பணம் கொள்ளையடிக்கப்பட்ட ஐஸ் கம்பெனிக்கு சென்று விசாரணை நடத்தினர். மோப்ப நாய் கொண்டு சோதனை செய்யப்பட்டது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இதுதொடர்பாக சோழவந்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Next Story