தினத்தந்தி செய்தி எதிரொலி செட்டிபுண்ணியம் கல்குவாரியில் அதிகாரிகள் ஆய்வு சென்னைக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு


தினத்தந்தி செய்தி எதிரொலி செட்டிபுண்ணியம் கல்குவாரியில் அதிகாரிகள் ஆய்வு  சென்னைக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு
x
தினத்தந்தி 24 Jun 2019 3:41 AM IST (Updated: 24 Jun 2019 3:41 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி செய்தி எதிரொலியாக செட்டிபுண்ணியம் கல்குவாரியில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி, சென்னைக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்தனர்.

செங்கல்பட்டு,

பருவ மழை பொய்த்து போனதாலும் ஆறு, குளங்கள், ஏரிகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. இதனால் தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. தலைநகர் சென்னையில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அன்றாட தேவைக்கு கூட தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். குடிநீருக்காக இரவு பகல் என காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது.

பல ஐ.டி. நிறுவனங்கள் அலுவலகங்களை மூடி விட்டு, ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்றும்படி கேட்டுக்கொண்டனர்.

இந்த சூழ்நிலையில் செங்கல்பட்டு அருகே சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த செட்டிபுண்ணியம் கல்குவாரியில் சுமார் 1,500 அடி ஆழத்தில் சுத்தமான குடிநீர் உள்ளதாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு தினத்தந்தியில் படத்துடன் செய்தி வெளிவந்தது.

மேலும் அன்றைய தினமே சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.பெரியகருப்பணன் உடனடியாக அந்த கல்குவாரியை ஆய்வு செய்ய உத்தரவிட்ட தகவலும் வெளியானது.

தினத்தந்தி செய்தி எதிரொலியாக நேற்று சென்னை குடிநீர் வாரிய செயற்பொறியாளர் ஜெய்சங்கர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் செயற்பொறியாளர் ஜெய்சங்கர் கூறியதாவது:-

சென்னையில் கடந்த 2017-ம் ஆண்டு ஏற்பட்ட வறட்சியை தொடர்ந்து குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளுக்கு தண்ணீர் வழங்க கல்குவாரிகளில் உள்ள தண்ணீரை சுத்திகரித்து வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதன் அடிப்படையில் குன்றத்தூரில் உள்ள சிக்கராயபுரம் பகுதியில் இருந்து எருமையூர் வரை உள்ள கல்குவாரிகளில் இருந்து ஏற்கனவே தண்ணீர் எடுத்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளோம்.

தற்போது தண்ணீர் தேவை அதிக அளவில் உள்ளதால் வண்டலூரில் இருந்து செங்கல்பட்டு வரை கல்குவாரி மலைப்பள்ளங்களில் தேங்கியுள்ள தண்ணீரை அதிநவீன கருவிகளை கொண்டு தண்ணீரின் அளவு மற்றும் தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

செட்டிபுண்ணியம் கல்குவாரி தண்ணீர் பயன்படுத்தும் வகையில் இருந்தால், இதனை கொண்டு சென்னைக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிகிறது.

Next Story