கடை ஷட்டரை உடைத்து கேக் திருடி தின்ற தம்பதிக்கு வலைவீச்சு
கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்து குழந்தைகளுடன் கேக்கை திருடி தின்ற தம்பதியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வசாய்,
கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே புகுந்து குழந்தைகளுடன் கேக்கை திருடி தின்ற தம்பதியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கேக் மாயம்
பால்கர் பகுதியில் ஈஸ்வர் சோனார் என்பவர் கேக் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது கடையை திறக்க வந்தார். அப்போது கடை ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது கடையில் இருந்த பொருட்கள் அங்கும், இங்குமாக சிதறி கிடந்தன. மேலும் கடையில் இருந்த கேக்குகள் மாயமாகி இருந்தன. உடனே அவர் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சியை பார்வையிட்டார்.
அதில், கடை ஷட்டரை ஒரு பெண், ஆண் மற்றும் 2 குழந்தைகள் உடைத்து உள்ளே சென்ற காட்சி பதிவாகியிருந்தது. கடைக்குள் சென்றதும் அவர்கள் அங்கிருந்த கேக்குகளை திருடி சாப்பிடுகின்றனர். மேலும் தங்களுக்கு தேவையான கேக்குகளை எடுத்து பையில் வைக்கின்றனர்.
4 பேருக்கு வலைவீச்சு
ஆண் பணப்பெட்டியை உடைக்கிறார். ஆனால் அவரது முயற்சி தோல்வியில் முடிகிறது. பின்னர் அவர்கள் 4 பேரும் அங்கிருந்து வெளியேறும் காட்சி பதிவாகியிருந்தது. மேலும் பக்கத்து கடையில் உள்ள டிஜிட்டல் பெயர் பலகையை உடைத்தும் இருக்கிறார்கள்.
இதுபற்றி ஈஸ்வர் சோனார் மற்றும் பக்கத்து கடைக்காரர் இருவரும் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இதில், கடைக்குள் புகுந்து கேக் திருடிய ஆணும், பெண்ணும் கணவர், மனைவி என்பதும், மற்ற இருவரும் அவர்களது பிள்ளைகளாக இருக்க கூடும் என்றும், அவர்களின் தோற்றத்தை பார்த்தால் பழைய பொருட்களை சேகரித்து விற்பவர்கள் போல தெரிகிறது என்றும் போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story