ஸ்ரீபெரும்புதூரில் பஸ் மோதி சிறுவன் பலி கடைக்கு சென்றபோது பரிதாபம்


ஸ்ரீபெரும்புதூரில் பஸ் மோதி சிறுவன் பலி  கடைக்கு சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 24 Jun 2019 3:46 AM IST (Updated: 24 Jun 2019 3:46 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீபெரும்புதூரில் கடைக்கு சென்ற சிறுவன் மீது பஸ் மோதியது. இதில் அவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் 4-வது குறுக்குத்தெருவை சேர்ந்தவர் கருப்பண்ணசாமி. தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு அர்ஷன் (வயது 10) என்ற மகனும், நிதர்ஷனா என்ற மகளும் இருந்தனர்.

அர்ஷன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். நிதர்ஷனா அதே பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள்.இந்த நிலையில் பக்கத்து வீட்டை சேர்ந்த கருப்பண்ணசாமியின் நண்பர் சொக்கலிங்கம் என்பவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் அர்ஷன், நிதர்ஷனா ஆகியோரை அழைத்துக்கொண்டு ஸ்ரீபெரும்புதூர் பஜார் பகுதியில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார்.

அப்போது ஸ்ரீபெரும்புதூரில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற அரசு பஸ், சொக்கலிங்கம் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். உடனே டிரைவர் தப்பி ஓடி விட்டார். இந்த விபத்தில் அர்ஷனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. சிறுமி நிதர்ஷனா மற்றும் சொக்கலிங்கம் ஆகியோர் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.

உடனே அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அர்ஷனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரின் ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கு காரணமான அரசு பஸ் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story