சுற்றுலா தலமாக்கும் நோக்கில் ஓட்டேரி ஏரியில் நடைபாதை அமைக்கும் பணி தீவிரம்


சுற்றுலா தலமாக்கும் நோக்கில் ஓட்டேரி ஏரியில் நடைபாதை அமைக்கும் பணி தீவிரம்
x

ஓட்டேரி ஏரியை சுற்றுலா தலமாக்கும் நோக்கில் ஏரியின் கரை மீது நடைபாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வேலூர்,

வேலூர் மாநகர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அனைத்து வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. நகரின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு அவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாநகராட்சி எல்லைக்குள் உள்ள பல்வேறு பூங்காக்கள் பயன்பாடு இன்றி புதர்மண்டி காணப்படுகிறது. அவற்றை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கி புனரமைக்கப்பட்டு வருகிறது.

அதில் வேலூர் ஓட்டேரி ஏரியும் ஒன்றாகும். இந்த ஏரி வேலூர் மாநகராட்சிக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக திகழ்கிறது. ஏரியின் அருகே மாநகராட்சி பூங்கா உள்ளது. இந்த ஏரிப்பகுதியை பொழுதுபோக்கும் இடமாக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனையொட்டி அங்கு பூங்காவும் உள்ளது. ஆனால் பராமரிப்பின்றி காணப்படுகிறது. இந்த நிலையில் ஏரிக்கரை பலப்படுத்தவும், பூங்காவை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு சுற்றுலா தலமாக்கும் வகையில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

வேலூர் ஓட்டேரி ஏரியில் அதிகப்படியான தண்ணீர் சேகரிக்க நடவடிக்கை எடுக்கும் விதமாக ஏரி தூர்வாரப்பட்டு வருகிறது. மேலும் ஏரிக்கரையை கற்களை கொண்டு பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி 60 சதவீதம் முடிவடைந்துள்ளது. பூங்காவும் புனரமைக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வர உள்ளது. பூங்காவில் இருந்து ஏரிக்கு சென்று இயற்கை சூழலுடன் நடைபயிற்சி மேற்கொள்ளும் வகையில் ஏரிக்கரையில் நடைபாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்காக ஏரிக்கரை சமப்படுத்தப்பட்டு இருபுறமும் சிறிய அளவிலான தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. இரவு நேரத்திலும் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் வசதிக்காக மின்விளக்குள் அமைக்கப்பட உள்ளது. இதற்கான மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் இப்பணி முடிந்து பூங்கா திறக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story