பொதுமக்கள் முற்றுகை போராட்டம்: விவசாய நிலத்தில் செல்போன் கோபுரம் அமைக்க தோண்டிய பள்ளம் மூடப்பட்டது


பொதுமக்கள் முற்றுகை போராட்டம்: விவசாய நிலத்தில் செல்போன் கோபுரம் அமைக்க தோண்டிய பள்ளம் மூடப்பட்டது
x
தினத்தந்தி 24 Jun 2019 4:25 AM IST (Updated: 24 Jun 2019 4:25 AM IST)
t-max-icont-min-icon

காட்பாடி கிளித்தான்பட்டடைறயில் விவசாய நிலத்தில் செல்போன் கோபுரம்அமைப்பதை எதிர்த்து பள்ளம் தோண்டப்பட்ட இடத்தைபொதுமக்கள் முற்றுகையிட்டு போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காட்பாடி,

காட்பாடி கிளித்தான்பட்டறையில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே விவசாய நிலத்தில் தனியார் நிறுவனம் சார்பில் செல்ேபான் கோபுரம் அமைப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. அந்த இடத்தில் செல்போன் கோபுரம் அமைத்தால் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு பலவிதமான பிரச்சினைகள் ஏற்படும், எனவே செல்போன் கோபுரம் அமைக்கக்கூடாது என கூறி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதுகுறித்து காட்பாடி போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் செல்போன் கோபுரம் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டிருந்த இடத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் மெயின்ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்து வந்த காட்பாடி போலீசார், போராட்டத்தில் ஈடுபட முயன்ற பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது செல்போன் கோபுரம் இங்கு அமைக்கப்படமாட்டாது என போலீசார் உறுதி அளித்தனர். பின்னர் கோபுரம் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் பொக்லைன் எந்திரம் மூலம் மூடி நிரப்பப்பட்டது. அதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பொதுமக்களின் இந்த திடீர் போராட்டத்தால் காட்பாடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story