புதுவையில் பகலில் கொளுத்தியது வெயில்; இரவில் கொட்டியது மழை


புதுவையில் பகலில் கொளுத்தியது வெயில்; இரவில் கொட்டியது மழை
x
தினத்தந்தி 24 Jun 2019 4:30 AM IST (Updated: 24 Jun 2019 4:29 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் நேற்று பகலில் வெயில் கொளுத்தியது. இரவில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் வெப்பம் தணிந்து இரவு குளிர்ந்த காற்று வீசியது.

புதுச்சேரி,

புதுவையில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது. நேற்றைய தினம் வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதிய வேளையில் அனல் காற்றும் உணரப்பட்டது. கடும் வெயில் காரணமாக ரோட்டில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. நேற்றைய தினம் 100.94 டிகிரி வெயில் கொளுத்தியது. வெயில் காரணமாக புதுவை வந்த சுற்றுலா பயணிகளும் ஓட்டல் அறைகளைவிட்டு வெளியே வர தயங்கினார்கள். பகல் நேரத்தில் வெளியே செல்லும் பெண்கள், இருசக்கர வாகனங்களில் செல்வோர் துப்பட்டாவால் தங்கள் முகத்தை மூடிக்கொண்டும், குடைகளை பிடித்தபடியும் செல்வதை காண முடிந்தது.

மாலையில் வெயில் குறைய தொடங்கியதும் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் காற்று வாங்க கடற்கரையில் குவிந்தனர்.

இந்த நிலையில் மாலையில் வெயில் தாக்கம் சற்று தணிந்ததும் பொதுமக்கள் பூங்கா, கடற்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு குடும்பத்துடன் படையெடுத்தனர். இதனால் கடற்கரை சாலை, பாரதி பூங்கா மற்றும் சன்டே மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

நேரு வீதியில் நேற்று மாலை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனவே போக்குவரத்தை சரிசெய்ய ஆட்டோ மற்றும் கார்கள் செல்லாமல் இருக்க போக்குவரத்து போலீசார் தடுப்புகட்டைகள் (பேரிகார்டுகள்) அமைத்தனர். அதன்படி நேரு வீதியில் இருசக்கர வாகனங்கள் செல்ல மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. அதன்பிறகு போக்குவரத்து நெரிசல் சீரானது.

இதற்கிடையே இரவு 8 மணியளவில் திடீரென இடி-மின்னலுடன் மழை பெய்யத்தொடங்கியது. மேலும் பலத்த காற்றும் வீசியது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் சன்டே மார்க்கெட்டில் வியாபாரம் பாதிக்கப்பட்டது. மழை பெய்ய தொடங்கியவுடன் அனைவரும் ஒரே நேரத்தில் இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் வீடுகளுக்கு புறப்பட்டதால் நகரின் முக்கிய சந்திப்பு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பலத்த காற்று வீசியதில் கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரி அருகே ஒரு மரம் வேரோடு சாய்ந்து நடுரோட்டில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கோரிமேடு தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே நிலைய அதிகாரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடுரோட்டில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் சுமார் ½ மணி நேரத்திற்கு போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

Next Story