கனகன் ஏரியில் கவர்னர் கிரண்பெடி ஆய்வு மரக்கன்றுகள் நட்டார்
புதுவை கனகன் ஏரியில் கவர்னர் கிரண்பெடி நேற்று காலை ஆய்வு செய்தார். அங்கு அவர் மரக்கன்றுகள் நட்டார்.
புதுச்சேரி,
புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி வார இறுதி நாட்களில் ஒவ்வொரு பகுதியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை அவர் கனகன் ஏரியை ஆய்வு செய்தார். இதற்காக அவர் புதுவை கவர்னர் மாளிகையில் இருந்து சைக்கிளில் புறப்பட்டு சென்றார். அப்போது அவருடன் கவர்னர் மாளிகை அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த பலர் உடன் சென்றனர்.
கனகன் ஏரியில் தற்போது தெளிவான தண்ணீர் கிடப்பதை பார்த்த கவர்னர் மகிழ்ச்சியடைந்தார். பின்னர் தனது செல்போனில் அதனை படம் பிடித்துக்கொண்டார். தொடர்ந்து அவர் அங்கு தூய்மை பணி மேற்கொண்டார். அப்போது கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களும், அரசு பள்ளி மாணவர்களும் இந்த பணியில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு அவர் மரக்கன்றுகள் நட்டார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு கவர்னர் மாளிகைக்கு திரும்பினார்.
இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கனகன் ஏரியில் ஆய்வு செய்தேன். அப்போது அங்கு கழிவுநீர் தேங்கி நின்றது. மருத்துவ கல்லூரி கழிவுநீர் மற்றும் அந்த பகுதியில் உள்ள கழிவுநீர் விடப்பட்டது தெரியவந்தது. இதனை பார்த்த நான் இங்கு கழிவுநீரை விடக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன். அதன்பின்னர் அது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது கனகன் ஏரியில் சுத்தமான தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனை தற்போது அரசுத்துறை அதிகாரிகளும், மாணவர்களும், தன்னார்வலர்களும் இணைந்து பராமரித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.