புதுவை கிராமப்புறங்களில் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க அதிரடி நடவடிக்கை; அதிகாரிகளுக்கு நாராயணசாமி உத்தரவு
புதுவை மாநிலத்தில் சில கிராமங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,
முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் வறட்சி ஏற்பட்டுள்ளது. பருவமழை பெய்யவில்லை. காவிரி நீரை கர்நாடக அரசு திறக்கவில்லை. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் கடந்த 15–ம் தேதி நடைபெற்ற நிதி ஆயோக் முதல்–மந்திரிகள் மாநாடு நடந்தது. அப்போது மழைநீர் சேமிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஏரி, குளங்களை தூர்வாருதல், வீடுகளில் மழைநீர் சேமிப்பு அமைப்புகள் உருவாக்குவது, பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குதல், தண்ணீர் வீணாவதை தடுத்தல் ஆகியவைபற்றி விவாதிக்கப்பட்டது.
நீர் நிலைகளை பாதுகாப்பது மட்டுமின்றி, ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநில அரசு நடவடிக்கை எடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. மத்திய அரசு முக்கியமாக நீர் பாதுகாப்பு கொள்கையை அறிவித்துள்ளது. பிரதமர் விவசாயத்திற்கு நீர் சேமிப்பு என்ற திட்டத்தை கொண்டுவந்துள்ளார். அதனடிப்படையில் பல நீர் நிலைகளில் மத்திய, மாநில அரசு இணைந்து தூர்வார நிதி ஆதாரத்தையும் கொடுத்துள்ளனர்.
புதுச்சேரியில் கடந்த ஆண்டு 16 ஏரிகளை தூர்வார நிதி ஒதுக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த பணியை எங்களுக்கு தான் வழங்க வேண்டும் என்று கவர்னரிடம் ஏரி சங்கங்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அரசு சார்பில் டெண்டர் மூலம் குறைந்த தொகைக்கு தூர்வார முன்வருபவர்களுக்கு பணியை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு கவர்னர் அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டதை எதிர்த்து ஏரி சங்கங்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தன.
அந்த வழக்கை ஐகோர்ட்டு கடந்த 4 மாதங்களுக்கு தள்ளுபடி செய்து, குறைந்த தொகைக்கு ஏரிகளை தூர்வாரும் அமைச்சரவை முடிவை இறுதி செய்தது. அரசு முடிவின்படி செயல்பட்டிருந்தால் கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பே ஏரிகள் தூர்வாரப்பட்டு இருக்கும். நீரை சேமிப்பது அத்தியாவசிய கடமை. புதுச்சேரி மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
வாழ்வாதாரம் நீரில் உள்ளது. பூமிக்கு அடியில் இருக்கும் நீரை அதிக அளவு உறிஞ்சினால் எதிர்கால சந்ததி பெருமளவு பாதிக்கப்படும். புதுவை மாநிலத்தில் சில கிராமங்களில் தற்போது குடிநீர் பற்றாக்குறை உள்ளது. பொதுப்பணித்துறை அமைச்சரிடம் பேசி இதனை சரி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளேன்.
நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளை அழைத்து பேசி மக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன். பல கிராம பஞ்சாயத்துகளில் கிராம சபை நடத்தப்பட்டு குறை கேட்கப்பட்டுள்ளது. பிரச்சினைகளை தீர்க்க நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்.
டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் நிதித்துறை மந்திரி ஆகியோரை சந்தித்த போது, புதுச்சேரி மக்கள் பிரச்சினைகள் தொடர்பான கருத்துக்களை வலியுறுத்தினேன். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தருவது அரசின் கொள்கை. இதை நிறைவேற்றும் கடமை அரசுக்கு உள்ளது. தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டுள்ளோம். மாநில அந்தஸ்து கேட்டு கூட்டணி கட்சிகள் சார்பில் டெல்லியில் தர்ணா போராட்டமும் நடத்தினோம். பிரதமரிடமும் மனு கொடுத்துள்ளோம்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தரும் மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டுவர வேண்டும் என்று பிரதமரிடம் தற்போது வலியுறுத்தியுள்ளேன். 15–வது நிதி கமிஷனில் புதுச்சேரியை சேர்க்க வேண்டும். மாநிலங்களுக்கு 42 சதவீதம் மானியம் தரப்படுகிறது. ஆனால் புதுவைக்கு 26 சதவீதம் மானியம் தான் தரப்படுகிறது. புதுவைக்கு தனி கணக்கு தொடங்கும்போது ரூ.2100 கடன் இருந்தது. அதை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் செய்யவில்லை. தற்போது வட்டியோடு சேர்த்து ரூ.1100 கோடி செலுத்தியுள்ளோம். எனவே மீதியுள்ள ரூ.1000 கோடியை தள்ளுபடி செய்ய வேண்டும்.
டெல்லியில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தை முழுவதும் மத்திய அரசே தருகிறது. ஆனால் புதுச்சேரியில் தரவில்லை. அதனை வழங்க வேண்டும். 7–வது ஊதியக்குழு பரிந்துரையையும் முழுவதும் அமல்படுத்தியுள்ளோம். ஆனால் 3 ஆண்டாக அதற்குள்ள நிலுவை தொகையை மத்திய அரசு வழங்கவில்லை.
மத்திய அரசின் நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு, அங்கன்வாடிக்கு உணவு, சர்வ சிக்ஷா அபியான் உள்ளிட்ட திட்டங்களில் 60 சதவீதம் தான் மானியம் தரப்படுகிறது. யூனியன் பிரதேசங்களுக்கு 90 சதவீதம் தரவேண்டும். அதனை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். கோரிக்கைகளை பரிசீலித்து புதுவைக்கு உதவுவதாக பிரதமர் உறுதி அளித்துள்ளார்.
முதல்–அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., தொடர்ந்த வழக்கில் கவர்னருக்கு தன்னிச்சையாக அதிகாரமில்லை என்று ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதற்கு தடை கேட்டு கவர்னர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் கடந்த 4–ந் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஐகோர்ட்டின் தீர்ப்பிற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து விட்டது. அமைச்சரவையில் எடுக்கப்படும் நிலம், நிதி தொடர்பான முடிவுகளை அமல்படுத்த தடை விதித்தது. இந்த வழக்கு மீண்டும் கடந்த 20–ந் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், ஐகோர்ட்டு உத்தரவின்படி செயல்படாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர மாட்டோம் என்று உறுதியளிக்கப்பட்டது. அப்போது கவர்னர் சார்பில் மஞ்சள் நிற ரேஷன்கார்டுகளுக்கு இலவச அரிசி வழங்க கூடாது, ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் நீதிமன்றம் ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து இந்த வழக்கை அடுத்த மாதம்(ஜூலை) 10–ந் தேதிக்கு தள்ளி வைத்தது. எனவே ஐகோர்ட்டு தீர்ப்பையே கடைபிடிக்க வேண்டும். வழக்கு நிலுவையில் இருப்பதால் பட்ஜெட் தாக்கல் செய்வது தடைபடாது.
இவ்வாறு அவர் கூறினார்.