மயிலாடுதுறை அருகே மொபட்–மோட்டார் சைக்கிள் மோதல்: சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் பலி


மயிலாடுதுறை அருகே மொபட்–மோட்டார் சைக்கிள் மோதல்: சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் பலி
x
தினத்தந்தி 24 Jun 2019 11:00 PM GMT (Updated: 2019-06-24T20:55:27+05:30)

மயிலாடுதுறை அருகே மொபட் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் போலீஸ் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் பரிதாபமாக பலியானார்.

குத்தாலம்,

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா கொட்டூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சேகர்(வயது 57). இவர், மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு ராணி என்ற மனைவியும், காசிநாதன் என்ற மகனும், விஜி என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது.

நேற்று முன்தினம் இரவு சேகர், மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணிகளை முடித்து விட்டு மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். மயிலாடுதுறை அருகே மங்கநல்லூர் கழனிவாசல் மெயின் ரோட்டை அவர் கடந்து சென்றபோது எதிரே வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள், எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சேகர் சம்பவ இடத்திலேயே பலியானார்.


இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பெரம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து சேகரின் மகன் காசிநாதன் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய தத்தங்குடி மன்மதன்கோவில் தெருவை சேர்ந்த செல்வம் மகன் விஸ்வா என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story