இரவு நேரங்களில் தண்ணீரை திருடி விற்பனை: லாரிகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்


இரவு நேரங்களில் தண்ணீரை திருடி விற்பனை: லாரிகளை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 24 Jun 2019 10:15 PM GMT (Updated: 2019-06-25T00:09:47+05:30)

இரவு நேரங்களில் ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீரை திருடி விற்பனைக்கு எடுத்து சென்ற லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பூந்தமல்லி,

பருவமழை பொய்த்து போனதாலும், கடுமையான வெயில் காரணமாகவும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகள் வறண்டன. நிலத்தடி நீர்மட்டமும் வற்றிப்போனதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இந்த ஆண்டு அதிகளவில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

இதனால் சென்னைவாசிகள் லாரி தண்ணீரை மட்டுமே நம்பி இருக்கின்றனர். இதனால் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் எந்த இடத்தில், எந்த நேரத்தில் தண்ணீர் கிடைத்தாலும் அதனை எடுத்துச்செல்லும் நோக்கில் தீவிரமாக உள்ளனர்.

லாரிகள் சிறைபிடிப்பு

பூந்தமல்லியை அடுத்த பாரிவாக்கம், பாணவேடுதோட்டம், பிடாரிதாங்கல் ஆகிய பகுதிகளில் அதிக ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு இரவு நேரங்களில் ஜெனரேட்டர் மூலம் தண்ணீரை திருடி லாரிகள் மூலம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள், ஓட்டல்களுக்கு விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதனை கண்டுபிடித்த அப்பகுதி மக்கள் நேற்று முன்தினம் இரவு தண்ணீரை திருடி விற்பனைக்கு ஏற்றிச்சென்ற லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தண்ணீர் பிடிக்க வந்த லாரிகளையும் அங்கிருந்து திருப்பி அனுப்பினார்கள்.

போலீசார் தடை

இதுகுறித்து தகவல் அறிந்துவந்த பூந்தமல்லி போலீசார், தண்ணீர் லாரிகளை சிறைபிடித்து வைத்திருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்த அவர்கள், போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, “எங்கள் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. 60 அடியில் ஆழ்குழாய் அமைக்கப்பட்ட இடத்தில் தற்போது 300 அடி முதல் 600 அடிக்கு ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க வேண்டிய நிலை உள்ளது. சென்னை குடிநீர் வாரியம் சார்பில் மக்களுக்காக இங்கிருந்து தண்ணீர் எடுத்து செல்லலாம். ஆனால் இங்கு வியாபாரம் நோக்கத்தோடு தினமும் 500 முதல் 700 லாரிகளில் தண்ணீரை திருடி விற்பனை செய்கிறார்கள். இதனால் எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. இதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இல்லை என்றால் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம்” என்றனர்.

இதையடுத்து அந்த பகுதிகளில் தற்காலிகமாக லாரிகளில் தண்ணீர் பிடித்து செல்ல போலீசார் தடை விதித்தனர். இதையடுத்து சிறை பிடித்த லாரிகளை விடுவித்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Next Story