வெறிநாய்கள் கடித்து 300 ஆடுகள் சாவு: இழப்பீடு கோரி தாராபுரம் சப்–கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை


வெறிநாய்கள் கடித்து 300 ஆடுகள் சாவு: இழப்பீடு கோரி தாராபுரம் சப்–கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை
x
தினத்தந்தி 24 Jun 2019 11:00 PM GMT (Updated: 2019-06-25T00:18:44+05:30)

தாராபுரம் பகுதியில் வெறிநாய்கள் கடித்ததில் 300 ஆடுகள் செத்தன. இவற்றுக்கு இழப்பீடு வழங்கக்கோரி தாராபுரம் சப்–கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாராபுரம்,

தாராபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக தெருநாய்களின் அட்டகாசம் அதிகமாக இருந்து வருகிறது. வீதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்கள், இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக கிராமப்புறங்களில் உள்ள தோட்டங்களுக்குள் சென்று அங்கு பட்டிகளில் அடைக்கப்பட்டிருக்கும் ஆடுகளை கொன்று, அதன் ரத்தத்தை குடித்துவிட்டு சென்று விடுகிறது.

வெறிபிடித்த தெருநாய்கள் ஒன்று அல்லது இரண்டு ஆடுகளை கொன்றால், விவசாயிகளுக்கு பெரிய இழப்பு ஏற்படப்போவதில்லை. ஆனால் ஆட்டுப்பட்டிக்குள் அடைத்து வைத்திருக்கும் அனைத்து ஆடுகளையும் வெறிநாய்கள் கொன்றுவிடுகிறது. இதனால் விவசாயிகளுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்பட்டு வருகிறது.

கடந்த வாரத்தில் மட்டும் தாராபுரம் பகுதியில் சங்கரண்டாம்பாளையம், சிறுகிணறு, வடுகபாளையம், கொழுமங்குழி, கண்ணாங்கோவில், வரப்பாளையம், செங்காட்டூர், இச்சிப்பட்டி, குள்ளாய்பாளையம், வேலாங்காட்டுப்புதூர், கோவில்பாளையம் உள்பட பல கிராமங்களில் வெறிநாய்கள் கடித்து 300–க்கும் மேற்பட்ட ஆடுகள் இறந்துள்ளன. வெறிநாய்களின் தாக்குதலால் விவசாயிகளுக்கு பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தடுக்கவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரியும், 100–க்கும் மேற்பட்ட விவசாயிகள் சப்–கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து முற்றுகையில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியதாவது:–

தெருநாய்களை கொல்லக்கூடாது என்கிற நிலை ஏற்பட்டதால், தெருநாய்களின் எண்ணிக்கை பரவலாக அதிகரித்துவிட்டது. தெருநாய்களுக்கு போதுமான உணவு கிடைப்பதில்லை. நகர் பகுதியில் உள்ள கோழி, ஆடு, மாடு போன்ற இறைச்சி கடைகளிலிருந்து வெளியே கொட்டப்படும் இறைச்சி கழிவுகளை சாப்பிட்டு பழகிவிட்டது.

மேலும் கிராமப்புறங்களில் உள்ள தனியார் கோழிப்பண்ணைகளில், இறந்து போகும் கோழிகளை, அப்பகுதியில் சாலையோரமாக வீசி எறிவதை தெருநாய்கள் சாப்பிட்டு பழகிவிட்டது. கால்நடை இறைச்சி கழிவுகளையும், இறந்த கோழிகளையும் சாப்பிட்டு பழகிய தெருநாய்கள் அவைகள் கிடைக்காதபோது, வெறி பிடித்த நிலையில் கிராமத்தில் இரவு நேரங்களில் ஆட்டுப்பட்டிகளுக்குள் புகுந்து, அங்கு அடைத்து வைத்திருக்கும் ஆடுகளை கடித்து கொன்றுவிடுகிறது. ஆட்டுகளை கொன்று அதன் ரத்தத்தை மட்டும் குடித்துவிட்டுச் சென்று விடுகிறது.

இந்த பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக வறட்சி தொடர்ந்து இருந்து வருகிறது. விவசாயிகளால் விவசாயம் செய்ய முடியவில்லை. அனைத்து விவசாயிகளும் கால் நடைகளை வளர்த்து அதன் மூலம் தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்றி வருகிறார்கள். இன்றைக்கு ஒரு ஆடு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. வெறிநாய்கள் தாக்குதலால் விவசாயிக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

செங்காட்டுப்புதூரை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் தோட்டத்தில், இரவில் ஆட்டுப்பட்டியில் அடைத்து வைத்திருந்த 30 ஆடுகளை, வெறிநாய்கள் ஒரே நேரத்தில் கடித்து கொன்றுவிட்டது. 30 ஆடுகளும் நன்கு வளர்ந்த ஆடுகள், இதன் மதிப்பு சுமார் ரூ.2½ லட்சம் ஆகும். ஆடுகளை நம்பி பிழைப்பு நடத்தி வந்த விவசாயிகளின் நிலை இன்றைக்கு கேள்விக்குறியாகிவிட்டது. வெறிநாய்களால் ஆடுகளை இழந்த சிறு, குறு விவசாயிகள், பாதிப்பை தாங்கமுடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டார். அரசு உடனடியாக இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்.

விவசாயிகள் வளர்க்கும் ஆடுகளுக்கு காப்பீடு வழங்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காப்பீட்டிற்கான தவணைத்தொகையை அரசு தரப்பில் 50 சதவீதமும், விவசாயிகள் தரப்பில் 50 சதவீதமும் செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வெறிநாய் தாக்குதலில் உயிரிழந்த ஆடுகளை கணக்கீடு செய்து, உடனடியாக விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரி சப்–கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டோம்

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இது பற்றி தகவல் அறிந்த சப்–கலெக்டர் பவன்குமார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விவசாயிகள் தரப்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கோரிக்கை குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து, விவசாயிகள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story