பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையில் மாற்றம் செய்ய வலியுறுத்தல்
கிராமப்புறங்களில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூரில் பள்ளி கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் கல்வி மாவட்ட அளவிலான பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. திருப்பத்தூர் அன்னை நர்சரி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு கல்வி மாவட்டத் தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார்.
கல்வி மாவட்ட நிர்வாகிகள் முத்துலெட்சுமி, உமாதேவி, சதீஷ்குமார், வெள்ளச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாநில இணைச் செயலாளர் கந்தசாமி சிறப்புரையாற்றினார்.
இதில், கிராமப்புறங்களில் பணி புரியும் இளநிலை உதவியாளர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறையில் மாற்றம் செய்ய வேண்டும். அனைத்து இளநிலை உதவியாளர்களுக்கும் பவானிசாகர் பயிற்சி முடித்தவர்களுக்கும் பணி வரன்முறை செய்ய வேண்டும்.
கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்கு தடையாக இருந்த தடை ஆணையை நீக்க வேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை செயல்படுத்தியதற்கு நன்றி தெரிவிப்பது.
இரவு காவலர்களுக்கு ஈட்டிய விடுப்பு உயர்த்த அரசாணை பெற்றுத் தந்ததற்கும், நேரடி நியமன ஆய்வக உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வரும் சங்கத்திற்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்டத் தலைவர் சரவணன், மாநில செயற்குழு உறுப்பினர் பட்டாபி நாகராஜன், மாவட்டச் செயலாளர் மலைராஜா, பொருளாளர் சபரிநாதன், துணைத் தலைவர்கள் ரபீக்ராஜா, அன்பழகன், சுப்பிரமணியன், இணைச் செயலர் செல்வம் உள்பட செயற்குழு உறுப்பினர்கள், அமைப்புச் செயலாளர்கள், மகளிரணியினர் கலந்து கொண்டனர். முடிவில் மலைச்சாமி நன்றி கூறினார்.