100 நாள் வேலை திட்டத்தில் குறைந்த கூலி வழங்குவதாக கிராம பெண்கள் புகார்
ராமநாதபுரம் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் குறைந்த கூலி வழங்குவதாகக் கூறி கிராம பெண்கள் திரளாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம்,
முதுகுளத்தூர் தாலுகா, வாத்தியனேந்தல், கர்நாடான், பனையடியேந்தல் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் திரளாக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். இவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:–
எங்கள் கிராமங்களைச் சேர்ந்த அனைவரும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நிர்ணயிக்கப்பட்ட அளவு நூறு நாள் வேலை செய்கிறோம். இதனை மேற்பார்வையாளர்கள் முழுமையாக ஆய்வு செய்து கணக்கெடுத்து செல்கின்றனர். ஆனால் எங்களுக்கு முறையான சம்பளம் வழங்குவதில்லை. நாளடைவில் தற்போது தினமும் ரூ.30 மட்டுமே கூலி வழங்குகின்றனர்.
இது குறித்து கேட்டால் முறையாக பதிலளிக்கவில்லை. உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காததால் நாங்கள் வேறு வழியின்றி ஒட்டுமொத்தமாக வேலைக்கு செல்லவில்லை. 100 நாள் வேலை திட்டத்தில் முறையான கூலி வழங்கப்படுவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் எங்களின் உழைப்பை சுரண்டும் அதிகாரிகள், அதற்கான அரசு நிர்ணயித்த கூலியை வழங்குவதில்லை.
இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து அரசு நிர்ணயித்த கூலி வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.
முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் அவர்கள் தங்களின் நூறுநாள் அடையாள அட்டையை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அடையாள அட்டை தேவையில்லை என்று அதனை தரையில் போட்டு கோஷமிட்டனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.