தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்பவர்களுக்கு 30 நாட்களுக்குள் பதில் அளிக்காவிட்டால் கடும் நடவடிக்கை


தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்பவர்களுக்கு 30 நாட்களுக்குள் பதில் அளிக்காவிட்டால் கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 25 Jun 2019 4:30 AM IST (Updated: 25 Jun 2019 12:39 AM IST)
t-max-icont-min-icon

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்பவர்களுக்கு 30 நாட்களுக்குள் பதில் அளிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில தகவல் ஆணையர் கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விசாரணை மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் தலைமையில் நேற்று நடந்தது. அப்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கோரி விண்ணப்பம் செய்து மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தவர்களுக்கான விசாரணை நடந்தது.

இவ்வாறு விண்ணப்பித்த 20 பேரிடம் விசாரணை நடந்தது. அப்போது அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிய தகவல்களை அளித்திட தொடர்புடைய அலுவலகங்களை சேர்ந்த பொது தகவல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

பின்னர் அனைத்து அரசு அலுவலர்கள் அடங்கிய கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் பேசியதாவது:-

அரசு அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களை கனிவுடன் நடத்த வேண்டும். அவர்கள் கேட்கும் விவரங்களை அப்போதே கொடுத்து விட்டால், அவர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திடம் வரவாய்ப்பில்லை. இந்த சட்டம் என்பது இன்னொரு சுதந்திரமாக கருதப்படுகிறது.

ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் 25 கேள்விகள் வரை கேட்கலாம், அதற்கு பதில் அளிப்பது அரசு அலுவலர்களின் கடமையாகும். ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்டால் 30 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மனுதாரர் மேல்முறையீடு என்ற வரம்புக்குள் வரவே கூடாது.

ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் பொது தகவல் அலுவலரின் பெயர், பதவி, தொலைபேசி எண் கட்டாயம் எழுதப்பட்டு இருக்க வேண்டும். பொதுமக்கள் வழங்கும் மனுக்களை அதிகாரிகள் படித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பலர் மனுக்களை படிப்பதே இல்லை. அதே போல் தேடியதில் உரிய ஆவணங்கள் இல்லை என்ற பதிலை யாரும் அளிக்கக்கூடாது, அந்த ஆவணங்களை தேடி பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நமக்குள்ளது.

பெரும்பாலும் வருவாய்த்துறை தொடர்பான மனுக்கள் தான் அதிகம் வருகிறது. நிலம், நீர்நிலைகளை பாதுகாத்து அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற யாரும் தயக்கம் காட்ட வேண்டாம்.

இவ்வாறுஅவர் பேசினார்.

Next Story