பாபநாசத்தில் குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


பாபநாசத்தில் குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 25 Jun 2019 4:15 AM IST (Updated: 25 Jun 2019 12:48 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசத்தில் குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பாபநாசம்,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் பேரூராட்சி காப்பன் தெருவில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக அங்கு 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.

அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு, குறைந்த மின்னழுத்தம் காரணமாக அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று குடிநீர் வழங்கக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த பாபநாசம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில், வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார், கிராம நிர்வாக அதிகாரி அன்பரசன், சுகாதார ஆய்வாளர் செந்தில்குமரகுரு, இளநிலை உதவியாளர் குமரேசன் ஆகியோர் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன், சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. சாலை மறியல் போராட்டம் காரணமாக பாபநாசம்-சாலியமங்கலம் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story