சுருக்கு வலை பிரச்சினையில் நல்ல முடிவினை எடுக்கவேண்டும்; மத்திய, மாநில அரசுகளுக்கு தேசிய மீனவர் பேரவை வேண்டுகோள்
சுருக்கு வலை பிரச்சினையில் நல்ல முடிவினை எடுக்கவேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு தேசிய மீனவர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
புதுச்சேரி,
தேசிய மீனவர் பேரவையின் தலைவர் இளங்கோ நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தேசிய மீனவர் பேரவை சார்பில் மீனவர்களின் ஒருமித்த கோரிக்கையாக மத்திய விவசாய அமைச்சகத்தில் இருந்து பிரித்து மீன்வள அமைச்சகம் உருவாக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தோம். எங்கள் அமைப்பு சார்பில் 7 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட இக்கோரிக்கை கடந்த 5 ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையிலான அரசிடம் வலியுறுத்தப்பட்டு வந்தது.
விவசாயத்துறை மந்திரி ராதாமோகன்சிங், அப்போதைய நிதி மந்திரி அருண்ஜெட்லி, பிரதமர் நரேந்திரமோடி ஆகியோரிடம் தொடர்ந்து இக்கோரிக்கையை முன்வைத்து முயற்சித்தோம். கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு பிப்ரவரி மாத மத்திய பட்ஜெட்டில் கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளம் என்ற இலாகாவில் இருந்து தனியாக பிரித்து எடுத்து மீன்வளத்துக்கென தனி இலாகா ஏற்படுத்தப்படும் என்று அறிவித்தார்கள்.
அந்த அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் எங்கள் கோரிக்கை தனி மீன்வளத்துறை அல்ல. மீன்வள அமைச்சகம்தான் என்றும் திட்டவட்டமாக கூறி தொடர்ந்து எங்கள் கருத்தை எடுத்து வைத்தோம். மீனவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக கருத்தை தெரிவித்தோம். தற்போது எங்கள் கோரிக்கையை ஏற்று தனி மீன்வள அமைச்சகம் அமைக்கப்பட்டு அதற்கென கேபினெட் மந்திரியும், இணை மந்திரியும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
கடலில் மீன்பிடிப்பது தொடர்பாக இந்திய–இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தையில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது. இதை தீவிரப்படுத்த வேண்டும். சுருக்கு வலையை பயன்படுத்துவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் நல்ல முடிவினை எடுக்கவேண்டும்.
இவ்வாறு இளங்கோ கூறினார்.