சேரம்பாடி அருகே, மின்சாரம் தாக்கி காட்டு யானை சாவு
சேரம்பாடி அருகே மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழந்தது.
பந்தலூர்,
கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதிகளில் பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளது. இதனால் வனத்தில் இருந்து காட்டு யானைகள் அதிகளவில் ஊருக்குள் வருகின்றன. நேற்று முன்தினம் இரவு சேரம்பாடி அருகே கோரஞ்சால் பகுதிக்குள் காட்டு யானைகள் கூட்டமாக புகுந்தன. பின்னர் பொதுமக்களின் குடியிருப்பு பகுதியில் உள்ள மரங்களில் இருந்து பலாப்பழங்களை துதிக்கையால் பறித்து கீழே போட்டு காட்டுயானைகள் தின்றன.
இதனால் பொதுமக்கள் வெளியே வராமல் வீட்டுக்குள் முடங்கி இருந்தனர். பின்னர் காட்டு யானைகள் தனியார் தேயிலை தோட்டத்துக்குள் சென்றன. அப்போது நள்ளிரவில் காட்டு யானைகளின் பிளிறல் சத்தம் கேட்டது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இருப்பினும் அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து பார்க்க முடியாத நிலை இருந்தது. விடியற்காலையில் காட்டு யானைகள் அங்கிருந்து சென்று விடும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் செல்லவில்லை. தொடர்ந்து பிளிறல் சத்தம் கேட்டவாறு இருந்தது.
இதையடுத்து தனியார் தேயிலை தோட்டத்துக்குள் 15 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டுயானை ஒன்று இறந்து கிடப்பதாக நேற்று வனத்துறைக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இதன்பேரில் சேரம்பாடி வனச்சரகர்கள் சின்னதம்பி, கணேசன், வன காப்பாளர்கள் ராபர்ட் வில்சன், மாதவன் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு காட்டுயானைகள் கூட்டமாக நின்றிருந்தன. உடனே பட்டாசு வெடித்து அந்த காட்டுயானைகளை வனத்துறையினர் விரட்டியடித்தனர். அதன்பின்னர் இறந்து கிடந்த காட்டு யானையின் உடல் அருகில் சென்று வனத்துறையினர் பார்வையிட்டனர். காட்டுயானை தனது துதிக்கையால் மரக்கிளையை முறித்தபோது அந்த வழியாக சென்ற மின்கம்பி மீது உரசியதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கூடலூர் உதவி வன பாதுகாவலர் விஜயன், மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள் தமிழரசன், சின்னராஜா, ஹரி, தர்வீஸ் ஆகியோர் நேரில் வந்து பார்வையிட்டனர்.
பின்னர் கால்நடை டாக்டர்கள் பாரத்ஜோதி, ரேவதி, ஜோதி ஆகியோர் வரவழைக்கப்பட்டு காட்டு யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் முக்கிய உடற்பாகங்களையும் வனத்துறையினர் சேகரித்தனர். இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, பிரேத பரிசோதனை அறிக்கையின் முழு விவரம் கிடைத்த பின்னரே காட்டு யானை இறப்புக்கான காரணத்தை உறுதியாக கூற முடியும் என தெரிவித்தனர். சம்பவம் குறித்து தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story