மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 25 Jun 2019 4:00 AM IST (Updated: 25 Jun 2019 1:16 AM IST)
t-max-icont-min-icon

மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம், 

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.புதுப்பாளையம், அண்ணாநகர், அண்ட்ராயனூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். இவர்கள் அனைவரும் திடீரென கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அண்ட்ராயனூர் தென்பெண்ணையாற்றில் மணல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷம் எழுப்பினர்.

உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன் பிறகு அவர்களில் குறிப்பிட்ட சிலரை, மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க அழைத்துச்சென்றனர். அப்போது கலெக்டர் சுப்பிரமணியனிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

அண்ட்ராயனூரில் மணல் குவாரி அமைக்க அரசு அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். மணல் குவாரிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடம், ஆண்டுதோறும் கோவில் திருவிழா நடைபெறும் இடமாகும். ஏற்கனவே டி.புதுப்பாளையத்தில் 2 இடங்களில் குவாரி அமைத்து மணல் வினியோகம் செய்யப்பட்டதால் ஆற்றில் அதிகளவில் பள்ளம் ஏற்பட்டு மழைக்காலங்களில் பொதுமக்கள், குழந்தைகள் அந்த பக்கம் செல்லவே அச்சப்பட்டு வருகின்றனர்.

தற்போது குவாரி அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள இடமாகும். இந்த இடத்தில் மணல் குவாரி அமைத்தால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. அதுமட்டுமின்றி இங்கு மணல் குவாரி அமைத்தால் வரும்காலங்களில் நிலத்தடி நீர்மட்டம் மிகவும் குறைந்து கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அண்ட்ராயனூரில் மணல் குவாரி அமைக்கும் முடிவை கைவிட தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.

மனுவை பெற்ற கலெக்டர், இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Next Story