குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு


குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 25 Jun 2019 4:30 AM IST (Updated: 25 Jun 2019 1:21 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது வேப்பந்தட்டை தாலுகா பெரியம்மாபாளையம் (கிழக்கு) பாத்திமா நகரில் வசித்து வரும் பொதுமக்கள் திரண்டு வந்து கலெக்டர் சாந்தாவிடம் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

எங்கள் பகுதிக்கு 25 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அவ்வாறு வினியோகிக்கப்படும் குடிநீரும் போதிய அளவு இல்லை. மேலும் எங்கள் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டியிலும் தண்ணீர் ஏற்றப்படுவதில்லை. இதனால் நாங்கள் தினமும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகிறோம். எனவே குடிநீர் பிரச்சினையை தீர்க்க எங்கள் பகுதியில் ஆழ்குழாய் கிணறு அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

ஏரிகளை தூர்வார...

இதேபோல் பெரம்பலூர் மாவட்ட சமூக நல கூட்டமைப்பு சார்பில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், பல ஆண்டுகளாக பெரம்பலூர் நகர மக்களின் நீராதாரமாகவும், பெரம்பலூர் பகுதி விவசாய தேவைக்கும் பெரும் வரமாக உள்ள வெள்ளந்தாங்கி அம்மன் ஏரி இருந்து வந்தது. அந்த ஏரியும், அதற்கு நீர் வரத்தாக உள்ள வரத்து ஏரிகளும் தூர்வாரப்படாமல், தற்போது அதில் முட்புதர்கள் மண்டியும், கழிவு நீராலும், பிளாஸ்டிக் கழிவுகளாலும் சீர்குலைந்து காட்சியளிக்கிறது. இதனால் மழைக்காலம் மற்றும் கோடை காலங்களில் பெய்யும் மழை நீரை சேமித்து வைக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது.

இதனால் பெரம்பலூரில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடி வருகிறது. எனவே சின்னாறு வடிநில பகுதி 2-ன் லாடபுரம், குரும்பலூர், செஞ்சேரி, அரணாரை, பெரம்பலூர் மேலேரி, கீழேரி, வெள்ளந்தாங்கி அம்மன் ஏரி, துறைமங்கலம் ஏரி, புது ஏரி ஆகிய ஏரிகளையும், அதற்கு நீர் வரத்து வரும் வாய்க்கால்களை தூர்வாரவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு பெரம்பலூர் மாவட்ட சமூக நல கூட்டமைப்பு குழு ஒத்துழைப்பு தரும் என்று கூறப்பட்டிருந்தது.

குன்னம் தாலுகா தேனூர் கிராம இளைஞர்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் உள்ள ஆணைவாரி, உப்போடை ஆகிய ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கூறியிருந்தனர்.

பட்டா கேட்டு

எறையூர் நரிக்குறவர் காலனியில் வசித்து வரும் நரிக்குறவர்கள் மற்றும் நரிக்குறவர் நலச் சங்கத்தினர் சேர்ந்து கொடுத்த மனுவில், எறையூரில் நரிக்குறவ குடும்பத்தினரான நாங்கள் 45 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எங்களுக்கு அரசு கொடுத்த புறம்போக்கு நிலத்தில் தற்போது விவசாயம் செய்து வருகிறோம். எனவே அந்த நிலத்திற்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விவசாயம் செய்து வரும் பகுதியில் இருந்து நரி ஓடைக்கு செல்லும் பாதையும், நரி ஓடையில் இருந்து பொன்னகரம் செல்லும் பாதையும் மற்றும் எறையூரில் இருந்து மங்களமேடு செல்லும் பாதையும் மிகவும் மோசமாக காட்சியளிக்கிறது. எனவே அதற்கு பதிலாக அந்த பகுதிகளில் புதிதாக தார்ச்சாலை அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

குடோன் கட்ட வேண்டும்

பெரம்பலூர் மாவட்ட பொதுத்தொழிலாளர் சங்கத்தினர் கொடுத்த மனுவில், வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 28 சுமைப்பணி தொழிலாளர்களாகிய நாங்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறோம். சுமைப்பணி தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஓய்வறை அமைக்க வேண்டும். ஏற்று, இறக்கு கூலியை உயர்த்த வேண்டும். சிமெண்டு வைத்துள்ள குடோன் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், புதிதாக குடோன் கட்ட வேண்டும். ஊராட்சி அலுவலகம் அருகே அரசு மருத்துவமனை உள்ளது. அங்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்வதால், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு முன்பு நிழற்குடை வசதி ஏற்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.

குன்னம் தாலுகா பெரிய வெண்மணி வடக்கு தெருவை சேர்ந்த வரதராஜன் கொடுத்த மனுவில், வருகிற 28-ந் தேதி பெரம்பலூர் மாவட்டத்தில் ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. இதனால் அந்த கூட்டத்தை நடத்த வரும் அதிகாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பயிற்சி அளித்து அனுப்ப வேண்டும் என்றார்.

Next Story