பெரவள்ளூர், வியாசர்பாடியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்


பெரவள்ளூர், வியாசர்பாடியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 25 Jun 2019 4:00 AM IST (Updated: 25 Jun 2019 1:47 AM IST)
t-max-icont-min-icon

பெரவள்ளூர், வியாசர்பாடியில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திரு.வி.க.நகர்,

சென்னை பெரவள்ளூர் ராஜா கார்டன் குடிசை மாற்று வாரிய குடியிருப்புக்கு கடந்த 2 நாட்களாக தண்ணீர் வினியோகம் செய்யவில்லை என்று கூறி 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று மாலை பேப்பர் மில்ஸ் சாலையில் குடிநீர் கேட்டு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த பெரவள்ளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிட்டிபாபு தலைமையிலான போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தங்களுக்கு உடனடியாக தண்ணீர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்தால்தான் சாலை மறியலை கைவிடுவோம் என்றனர்.

இதையடுத்து குடிநீர் வாரிய அதிகாரிகள் மூலம் 2 தண்ணீர் லாரிகள் உடனடியாக வரவழைக்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வியாசர்பாடி

சென்னை வியாசர்பாடி நேரு நகர் சுற்றுவட்டார பகுதிகளில் குழாய்களில் தண்ணீர் வராததால் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் கடந்த ஒரு வாரமாக லாரி மூலமும் குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து அந்த பகுதி பெண்கள் நேற்று மாலை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பிரதான சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த வியாசர்பாடி போலீசார், இதுபற்றி குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் பேசி தண்ணீர் லாரிகள் மூலம் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story