தமிழக அரசு குடிநீர் பிரச்சினையை தீர்க்காமல் மக்களை ஏமாற்ற மதத்தை பயன்படுத்துவதா? கனிமொழி எம்.பி. பேச்சு


தமிழக அரசு குடிநீர் பிரச்சினையை தீர்க்காமல் மக்களை ஏமாற்ற மதத்தை பயன்படுத்துவதா? கனிமொழி எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 24 Jun 2019 11:15 PM GMT (Updated: 24 Jun 2019 8:56 PM GMT)

தமிழக அரசு குடிநீர் பிரச்சினையை தீர்க்காமல், மக்களை ஏமாற்றுவதற்கு மதத்தை பயன்படுத்துவதா? என்று கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

கோவில்பட்டி,

கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் விழா மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடந்தது. தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கனிமொழி எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

தமிழக மக்கள் மொழி உணர்வு, இன உணர்வு, சுயமரியாதை உணர்வுடன் இருக்க வேண்டும் என்று பாடுபட்டவர் கருணாநிதி. மேலும் அவர் மூடநம்பிக்கை, சாதிய கொடுமைகளுக்கு எதிராக பாடுபட்டு, அவற்றை முடிவுக்கு கொண்டு வந்தார். மழை வேண்டும் என்று மக்களே கோவில்களிலும், பள்ளிவாசல்களிலும், கிறிஸ்தவ ஆலயங்களிலும் வேண்டி கொள்வார்கள். ஆனால் நீர்நிலைகள், நீர்வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும் என்ற கடமையை அரசாங்கம் செய்ததா?. அவற்றை எல்லாம் தூர்வாரியதாக பொய் கணக்கு எழுதியதை தவிர ஒன்றுமே செய்யவில்லை.

குடிநீர் தட்டுப்பாட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தவுடன், பா.ஜனதா வகுத்து கொடுத்தபடி மக்களை திசைதிருப்புவதற்காக, மழை வேண்டி கோவில்களில் வழிபாடு நடத்துவதாக அ.தி.மு.க. அரசு அறிவிக்கிறது. இது குடிநீருக்காக மக்களை பொறுமையுடன் காத்திருக்க வைக்கும் சூழ்ச்சி ஆகும். குடிநீர் பிரச்சினையை தீர்க்காமல், மக்களை ஏமாற்றுவதற்காக அரசு மதத்தை பயன்படுத்துவதா? இதை நாங்கள் எதிர்க்கிறோம்.

நாடாளுமன்றத்தில் பா.ஜனதா எம்.பி.க்கள் பதவி ஏற்றபோது, அவர்களில் சிலர் மற்ற மதங்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். அவர்களுக்கு நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் ‘தமிழ் வாழ்க, பெரியார் வாழ்க, அண்ணா வாழ்க, கலைஞர் வாழ்க, அம்பேத்கர் வாழ்க’ போன்ற கோஷங்களை எழுப்பி, தக்க பதிலடி கொடுத்து கதிகலங்க வைத்தனர்.

ஒரு காலத்தில் சமஸ்கிருதம் படித்தால்தான் டாக்டராக முடியும், கோவிலுக்குள் குறிப்பிட்ட பிரிவினர்தான் செல்ல முடியும் என்ற நிலை இருந்தது. அந்த கொடுமைகளை நீதிக்கட்சி, திராவிடக்கட்சி முடிவுக்கு கொண்டு வந்தன. தற்போது அந்த கொடுமைகளை மீண்டும் அரங்கேற்றும் வகையில், மத்தியில் பா.ஜனதாவினர் செயல்படுகின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அ.தி.மு.க. அரசு செயல்படுகிறது. தமிழக மக்களை பாதிக்கும் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் ஏற்று கொண்டால், மீண்டும் பழைய நிலையே ஏற்படும்.

தமிழக மாணவர்கள் மருத்துவம் பயில வேண்டும் என்பதற்காக மாவட்டந்தோறும் அரசு மருத்துவ கல்லூரிகளைக் கொண்டு வந்தவர் கருணாநிதி. ஆனால் தற்போது நீட் தேர்வு திணிக்கப்பட்டதால், தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் வடமாநில மாணவர்களே அதிகம் படிக்கின்றனர். ஏற்கனவே ரெயில்வே துறை உள்ளிட்ட மத்திய அரசு பணிகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இந்தி திணிப்பு, மீத்தேன் திட்டம் போன்ற மக்களை பாதிக்கும் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லையெனில், சொந்த மண்ணிலே நாம் அகதிகளாக வாழும் நிலை ஏற்படும்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றாலும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா? என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். விரைவில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் விரைவில் நல்லாட்சி அமையும். அப்போது தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேறுவது நிச்சயம். இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.

Next Story