கருகிய நெல் பயிர்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த விவசாயிகள் அணையில் இருந்து தண்ணீர் திறக்கக்கோரி மனு கொடுத்தனர்


கருகிய நெல் பயிர்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த விவசாயிகள் அணையில் இருந்து தண்ணீர் திறக்கக்கோரி மனு கொடுத்தனர்
x
தினத்தந்தி 24 Jun 2019 10:45 PM GMT (Updated: 24 Jun 2019 9:00 PM GMT)

அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரி கருகிய நெல் பயிர்களுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் மனு அளித்தனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதே போல நேற்றும் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார். அப்போது கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத் திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 452 பேர் மனு அளித்தனர். இதற்காக மக்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்த மனுக்களை கலெக்டர் பிரசாந்த் வடநேரே பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ராகுல்நாத், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஜெயராணி மற்றும் அனைத்து துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கருகிய நெல் பயிர்கள்

முன்னதாக பறக்கை வலிகொலி அம்மன் குளப்புரவு விவசாயிகள் சங்கத்தை ேசர்ந்த விவசாயிகள் கருகிய நெல் பயிர்களுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அகஸ்தீஸ்வரம் தாலுகாவுக்கு உட்பட்ட பறக்கை குளம் மூலமாக ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது பறக்கை குளத்தில் தண்ணீர் இல்லை. இதனால் ஏற்கனவே பயிரிட்ட நெல் பயிர்கள் பெரும்பாலும் கருகிவிட்டன. மேலும் பல இடங்களில் பயிர்கள் கருகி வருகின்றன. எனவே அணையில் இருந்து பறக்கை குளத்துக்கு முன்னுரிமை அளித்து தண்ணீர் திறந்து விட வேண்டும். இல்லையெனில் அனைத்து பயிர்களும் கருகி விடும். இதனால் விவசாயிகள் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுவிடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இதுபற்றி விவசாயிகளிடம் கேட்டபோது, “வழக்கமாக தென் மேற்கு பருவ மழையை நம்பி நெல் பயிரிடுவோம். குமரி மாவட்டத்தில் தற்போது பருவ மழை தொடங்கி இருந்தாலும் குளங்களுக்கு தண்ணீர் வரும் அளவுக்கு பலத்த மழை பெய்யவில்லை. சாரல் மழையாகவே பெய்து வருகிறது. இதனால் குளுமை இருக்கிறதே தவிர தண்ணீர் கிடைப்பதில்லை. தண்ணீர் இல்லாததால் நெல் பயிரிடப்பட்ட வயல்களில் வெடிப்பு விழுந்துவிட்டது. இந்த காட்சி விவசாயிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் பல வயல்கள் வெடிப்பு விழும் நிலைக்கு ஆளாகியுள்ளன. எனவே விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி அணையில் இருந்து குளத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும்” என்றனர். மனு அளிக்க வந்தவர்களுடன் ஆஸ்டின் எம்.எல்.ஏ.வும் வந்திருந்தார்.

மக்கள் நீதி மய்யம்

குமரி கிழக்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் பொறுப்பாளர் சசி, நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட எபினேஷர் மற்றும் நிர்வாகிகள் திரளாக வந்து ஒரு மனு அளித்தனர்.

அந்த மனுவில், “குமரி மாவட்டத்தில் வருகிற 28-ந் தேதி கிராம சபை கூட்டம் நடக்கிறது. இதுதொடர்பாக உரிய முறையில் விளம்பரப்படுத்தி மக்களை வரவழைக்க வேண்டும். எந்த விதமான முறைகேடுகளும் இல்லாமல் சட்டப்படி அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்திட வேண்டும். கிராம சபை கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் நகல்கள் மக்களுக்கு கிடைத்திட நடவடிக்கை எடுப்பது அவசியம்” என்று கூறப்பட்டுள்ளது.

Next Story