குடிநீர் பிரச்சினையை தீர்க்காததை கண்டித்து தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரியில் நடந்தது


குடிநீர் பிரச்சினையை தீர்க்காததை கண்டித்து தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் கிருஷ்ணகிரியில் நடந்தது
x
தினத்தந்தி 24 Jun 2019 11:00 PM GMT (Updated: 24 Jun 2019 9:16 PM GMT)

குடிநீர் பிரச்சினையை தீர்க்காததை கண்டித்து தி.மு.க. சார்பில் கிருஷ்ண கிரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில், குடிநீர் பிரச்சினையை தீர்க்காத அ.தி.மு.க. அரசை கண்டித்தும், குடிநீர் பஞ்சத்திற்கு காரணமான உள்ளாட்சி துறை அமைச்சர் பதவி விலக கோரியும், சீரான முறையில் குடிநீர் வழங்க கோரியும் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான சுகவனம், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன், மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணகிரி நகர செயலாளர் நவாப் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் செங்குட்டுவன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

ஒகேனக்கல் கூட்டுகுடிநீர்

தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 50 சதவீதம் தண்ணீர் பிரச்சினை இல்லாததற்கு முழு காரணம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தான். அதையும் அனைத்து கிராமங்களுக்கு கொண்டு செல்லாமல் போனதால் தற்போது குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. பருவ மழை வரவில்லை. அதற்கு அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே வாணி ஒட்டு என்ற இடத்தில் தடுப்பணை கட்டி ஏரிகளுக்கு தண்ணீர் விட்டிருந்தால் இந்த பிரச்சினை வந்திருக்காது. கிருஷ்ணகிரியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் ரூ.50 கோடிக்கு திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதில் ஒன்று கூட செயல்படுத்தப்படவில்லை.

அமல்படுத்துங்கள்

மாவட்டத்தில் உள்ள ஆழ்துளை கிணறுகளை ஆழப்படுத்தி, சீர்செய்யுங்கள். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை முழுமையாக அமல்படுத்துங்கள். அவ்வாறு செய்தாலே குடிநீர் பிரச்சினையை தீர்க்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட துணை செயலாளர்கள் நாகராஜ், சாவித்திரி கடலரசுமூர்த்தி, சந்திரன், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், மதியழகன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பொன்.குணசேகரன், தம்பிதுரை, நிர்வாகிகள் பரிதா நவாப், டாக்டர் மாலதி, அமீன், அஸ்லம், ரஜினி செல்வம் மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story