மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி, டாஸ்மாக்கடையை அகற்றக்கோரி பிணத்துடன் ரோட்டில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம்
மோட்டார் சைக்கிள் மோதியதில் பெண் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து, டாஸ்மாக்கடையை அகற்றக்கோரி பிணத்துடன் ரோட்டில் அமர்ந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
துடியலூர்,
கோவை கணுவாய் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் ரமேஷ், டாக்டர். இவருடைய மனைவி ஷோபனா (வயது 48). இவர்களுடைய மகள் சாந்திதேவி (16) ஆனைக்கட்டியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். பள்ளி முடிந்து மகளை அழைத்துக்கொண்டு ஸ்கூட்டரில் ஷோபனா வந்து கொண்டு இருந்தார்.
ஆனைகட்டியை சேர்ந்த பாலாஜி என்பவர் மோட்டார் சைக்கிளை எதிர்திசையில் வேகமாக ஓட்டி வந்துள்ளார். பின்னால் அவருடைய நண்பர் அசோக் என்பவர் இருந்துள்ளார். அதிவேகமாக வந்து ஷோபனாவின் ஸ்கூட்டர் மீது மோதியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ஷோபனா இறந்தார். இதையடுத்து, படுகாயம் அடைந்த சாந்திதேவியை அப்பகுதி மக்கள் மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். பாலாஜி குடிபோதையில் வந்து ஸ்கூட்டர் மீது மோதி உயிரிழப்பை ஏற்படுத்தியதாக தெரிகிறது. மேலும் அவரும், அசோக்கும் காயம் அடைந்து தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஜம்புகண்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுகுடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வருபவர்களினால் தான் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதாகவும், ஷோபனாவின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்று கோரி, அப்பகுதி மக்கள் ஷோபனாவின் உடலை நடுரோட்டில் வைத்து 4 மணிநேரம் சாலைமறியல் போராட்டம் நடத்தினார்கள். இதில் திரளானவர்கள் கலந்துகொண்டனர். ஆனைக்கட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஏற்கனவே அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி போராட்டம் நடத்தியதாகவும், தொடர்ந்து மதுக்கடை செயல்படுவதால் உயிரிழப்பு ஏற்படுவதால் மதுக்கடையை மூடும் வரை போராட்டத்தை தொடருவதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வடக்கு பகுதி தாசில்தார், துடியலூர் இன்ஸ்பெக்டர் பாலமுரளி உள்பட பலர் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். டாஸ்மாக் கடையை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விபத்து ஏற்படுத்தி உயிரிழப்பு ஏற்படுத்தியவர்கள் மீது கடும் சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
ஷோபனா இறந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் மனைவியை பறிகொடுத்த டாக்டர் ரமேஷ், மக்கள் பிரச்சினைக்காக பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டவர். மனைவியின் உடலை பார்த்து அவர் கதறிதுடித்தது பரிதாபமாக இறந்தது.
Related Tags :
Next Story