தந்தை-மகன் உள்பட 4 பேர் தீக்குளிக்க முயற்சி, கலெக்டர் அலுவலகத்தில் அடுத்தடுத்து நடந்த சம்பவத்தால் பரபரப்பு


தந்தை-மகன் உள்பட 4 பேர் தீக்குளிக்க முயற்சி, கலெக்டர் அலுவலகத்தில் அடுத்தடுத்து நடந்த சம்பவத்தால் பரபரப்பு
x
தினத்தந்தி 25 Jun 2019 4:00 AM IST (Updated: 25 Jun 2019 5:57 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தந்தை-மகன் உள்பட 4 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல், 

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் காலையில் இருந்தே கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து தங்கள் கோரிக்கை குறித்து கலெக்டரிடம் மனு அளித்தனர். முன்னதாக கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசார், பொதுமக்களை சோதனையிட்ட பின்பே கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதித்தனர்.

இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்துக்கு ஒரு தந்தையும், மகனும் வந்தனர். அவர் களின் கையில் ஒரு பிளாஸ்டிக் கேன் இருந்தது. நுழைவு வாயில் அருகே வந்ததும் திடீரென இருவரும் அந்த கேனில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதைப்பார்த்த போலீசார் அவர்களை தடுத்தனர். பின்னர் இருவரின் மீதும் தண்ணீரை ஊற்றினர்.

பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் வேடசந்தூர் தாலுகா சித்தூரை அடுத்த நல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த கந்தசாமி. அவருடைய மகன் சண்முககுமார் என்பது தெரியவந்தது. மேலும் சண்முககுமாருக்கும் அவரின் உறவினர்களுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்துள்ளது.

இந்த நிலையில் சொத்துக்களை பிரிப்பதில் ஏற்பட்ட பிரச்சினை குறித்து போலீசாரிடமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் அவர்கள் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து வாழ்க்கையில் வெறுப்படைந்த இருவரும் நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றதும் விசாரணையில் தெரியவந்தது. அதையடுத்து 2 பேரையும் கலெக்டரிடம் மனு கொடுக்கும்படி கூறி அனுப்பி வைத்தனர்.

இதே போல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கு முன்பு ஒரு பெண் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் அவர், திண்டுக்கல் நாராயணபிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்த வாசுதேவன் மனைவி அமுல் என்பதும், அவர்களுக்கு 3 மகன்கள் இருப்பதும் தெரியவந்தது. மேலும் அவருடைய கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் நெருங்கிய பழக்கம் இருந்தது. அதை அமுல், தட்டிக்கேட்ட போது, அவரை வாசுதேவன் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் மனமுடைந்த அமுல், கலெக்டர் முன்பு தீக்குளிக்க வேண்டும் என்பதற்காகவே கூட்ட அரங்குக்கு வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கலெக்டரிடம் மனு அளிக்கும்படி கூறி போலீசார் அந்த பெண்ணை அனுப்பி வைத்தனர். அவரும் தனக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவர் மற்றும் அவருக்கு உதவியாக இருப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளித்தார். அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இதற்கிடையே கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலுக்கு வந்த மற்றொரு பெண்ணும் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் திண்டுக்கல் நாகல்நகரை சேர்ந்த வேலாயுதம் மனைவி சாந்தி என்பதும், எஸ்.டி., எஸ்.சி. பிரிவினருக்கு அரசு ஒதுக்கிய நிலத்தை தங்களுக்கு முறைகேடாக விற்பனை செய்து மோசடி செய்த 3 பேர் மீது பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து அந்த பெண்ணை கலெக்டரிடம் அது குறித்து மனு அளிக்கும்படி கூறி போலீசார் அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பெண் கலெக்டரிடம் நில மோசடி செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மனு அளித்தார். தீக்குளிக்க முயன்ற 4 பேரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் அவர்களிடம் அந்தந்த பகுதி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் தந்தை-மகன் உள்பட 4 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story