கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தொழிலாளியை கொன்று ஆற்றில் புதைப்பு - மனைவி, கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது


கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தொழிலாளியை கொன்று ஆற்றில் புதைப்பு - மனைவி, கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 26 Jun 2019 5:00 AM IST (Updated: 25 Jun 2019 11:33 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக தொழிலாளியை கொன்று ஆற்றில் புதைத்த மனைவி, கள்ளக்காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள வெளியனூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 40). மரம் ஏறும் தொழிலாளி. இவருக்கு பாக்கியலட்சுமி(32) என்ற மனைவியும், சிந்துஜா(9), சைலஜா(2) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

முருகன் அடிக்கடி வெளியூர்களுக்கு வேலைக்கு சென்று வருவார். கடந்த 23.4.2019 அன்று வேலைக்கு சென்ற முருகன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். இருப்பினும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதையடுத்து பாக்கியலட்சுமி மாயமான தனது கணவரை கண்டுபிடித்து தரக்கோரி மயிலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான முருகனை தேடி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 28.4.2019 அன்று மயிலம் அடுத்த கொடுக்கூர் சங்கராபரணி ஆற்றில் ஆண் பிணம் ஒன்று பாதி புதைக்கப்பட்ட நிலையில் கிடப்பதாக மயிலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த பிணத்தை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் மாயமான தொழிலாளி முருகன் என்பதும், அவரை யாரோ கொலை செய்து பிணத்தை ஆற்றில் புதைத்துவிட்டு சென்றிருப்பதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படையினர் நடத்திய விசாரணையில், முருகனின் செல்போனை கொடிமா கிராமத்தை சேர்ந்த சங்கர்(40) என்பவர் பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தென்ஆலப்பாக்கத்தை சேர்ந்த கலியமூர்த்தி(45) என்பவருடன் சேர்ந்து முருகனை கொலை செய்து ஆற்றில் புதைத்தது தெரியவந்தது. மேலும் முருகனின் மனைவி பாக்கியலட்சுமிக்கும் அவரது உறவினர் கலியமூர்த்திக்கும் சுமார் 4 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததும், அதற்கு இடையூறாக இருந்த முருகனை திட்டம் போட்டு அழைத்துச் சென்று நைலான் கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்து சங்கராபரணி ஆற்றில் புதைத்ததும் தெரியவந்தது. பின்னர் முருகன் மாயமான வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி சங்கர், கலியமூர்த்தி மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த பாக்கியலட்சுமி ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Next Story