காதலித்து ஏமாற்றிய வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை


காதலித்து ஏமாற்றிய வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 25 Jun 2019 10:30 PM GMT (Updated: 2019-06-26T00:29:41+05:30)

காதலித்து ஏமாற்றிய வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துண்டகட்டளை கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது 31). இவர் திருவண்ணாமலை மாவட்டம், நடுபட்டு பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் இவர் மீது மன்னார்குடியை அடுத்த கூனமடை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகள் ஹேமாஸ்ரீ(24), மன்னார்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.

அதில் சதீஷ்குமாரும், நானும் காதலித்து வந்தோம். பின்னர் அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசம் அனுபவித்து விட்டு தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார் என்று கூறி இருந்தார்.

இந்த புகாரின்பேரில் மன்னார்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் சதீஷ்குமாரை கடந்த மாதம் 27-ந் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த சதீஷ்குமார், மன்னார்குடி அருகே உள்ள வேட்டைதிடல் கிராமத்தில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு சென்று தங்கினார்.

அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நிபந்தனை ஜாமீன் கையெழுத்து போடுவதற்காக நேற்று சென்றார். பின்னர் அவருடைய அத்தை வீட்டிற்கு வந்த சதீஷ்குமார், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து மன்னார்குடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story