பெரம்பூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்


பெரம்பூரில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 26 Jun 2019 4:00 AM IST (Updated: 26 Jun 2019 12:45 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பூரில் சாலையோர ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர்.

பெரம்பூர்,

சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை 4-வது மண்டலத்திற்கு உட்பட்ட பெரம்பூர் ரமணா நகர் ஜவகர் பிரதான சாலையில் சாலையோரம் இருபுறங்களிலும் வீடுகள் மற்றும் கடைகளுக்கு முன்பு சிலர் ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.

இதில் பலர் மேற்கூரை அமைத்து சாலையை ஆக்கிரமித்ததோடு 10 அடிக்கு மேல் சுவர் கட்டியும், தரை அமைத்தும் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக புகார் வந்தது. மேலும் இப்பகுதியில் குற்றச்செயல்கள் அதிகமாக நடைபெறுகிறது. எனவே குற்றச்செயல்களை தடுக்க சில நகைக்கடை மற்றும் வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

இந்த கண்காணிப்பு கேமராக்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள மேற்கூரை மற்றும் சுவர்கள் மறைப்பதாகவும், கேமராக்களில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களின் உருவம் பதிவாவதில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சென்னை மாநகராட்சி ஆணையருக்கு பொதுமக்கள் சார்பில் புகார் அளித்துள்ளனர்.

அதிரடியாக அகற்றம்

அதன்பேரில் நேற்று திடீரென தண்டையார்பேட்டை 4-வது மண்டல அதிகாரி மங்கல ராமசுப்பிரமணியம் மேற்பார்வையில் செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மாநகராட்சி 9-வது பகுதி உதவி செயற்பொறியாளர் கோபி, உதவி பொறியாளர் பாஸ்கர் மற்றும் மலர் ஆகியோர் ஜவகர் நகர் பிரதான சாலையில் சாலையை ஆக்கிரமித்த 300-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் முன்பு அமைக்கப்பட்ட மேற்கூரைகளை மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஆக்கிரமிப்பாளர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு முற்றுகையிட்டனர். உடனே செம்பியம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு 20-க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

இதுபோன்று ஆக்கிரமிப்பு செய்தால் மீண்டும் அதிரடியாக அகற்றும் பணி தொடர்ந்து செய்யப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story